தமிழ்நாடு

கோதைமங்கலத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி: பழனி மலைக்கோயிலில் நாளை பிற்பகல் நடையடைப்பு

DIN


பழனி கோதைமங்கலத்தில் அம்பு போடும் நிகழ்ச்சியை முன்னிட்டு பழனி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடையடைக்கப்படவுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த அக்.9-ஆம் தேதி நவராத்திரி திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பழனி பெரியநாயகியம்மன் கோயிலிலும் நவராத்திரி நாள்கள் முழுக்க அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை மலைக்கோயிலில் ஆயுதபூஜை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை விஜயதசமியை முன்னிட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்படும். பின் மலைக்கோயிலில் இருந்து சக்திவேல் புறப்பாடு செய்யப்பட்டு பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடையும். இதனால் மலைக்கோயில் பிற்பகல் 1.30 மணிக்கு மேல் நடையடைக்கப்படும். சக்திவேல், பெரியநாயகியம்மன் கோயில் வந்த பின்னர் முத்துக்குமாரசுவாமி சகிதமாக தங்கக்குதிரை வாகனத்தில் வெற்றிவேல் மாலையுடன் அருள்மிகு மானூர் சுவாமிகள் கோயில் அருகிலுள்ள கோதைமங்கலம் செல்கிறார். அங்குள்ள கோதீஸ்வரர் கோயில் அருகே வன்னிமரமாக உருமாறி நிற்கும் வன்னிகாசுரனை சக்திவேல் கொண்டு வதம் செய்த பின் முத்துக்குமாரசாமி பெரியநாயகியம்மன் கோயிலை அடைகிறார். சக்திவேல் மலைக் கோயிலுக்கு புறப்பாடு செய்யப்படும். பின்னர் மலைக்கோயிலில் சம்ப்ரோக்ஷண பூஜைகள் நடத்தப்பட்டு நள்ளிரவு அர்த்தஜாமபூஜை நடத்தப்படும். விழா ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT