தமிழ்நாடு

மைசூரில் தசரா விழா: மக்கள் வெள்ளத்தில் யானைகள் ஊர்வலம்

DIN


உலகப் புகழ் பெற்ற மைசூரு தசரா விழாவின் முக்கிய நிகழ்வான யானைகள் ஊர்வலத்தை கர்நாடக முதல்வர் குமாரசாமி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார். லட்சக்கணக்கான மக்கள் சூழ்ந்திருக்க, தீப்பந்த ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
1610-ஆம் ஆண்டில் ராஜா உடையாரால் தொடங்கி வைக்கப்பட்ட தசரா திருவிழா, 408- ஆவது ஆண்டாக மைசூரில் நடைபெற்றது. கடந்த அக்.10-ஆம் தேதி தொடங்கி 10 நாள்களாக நடைபெற்ற தசரா விழாவின் அங்கமாக நடைபெறும் யானைகள் ஊர்வலத்தை மைசூரு, அரண்மனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு முதல்வர் குமாரசாமி தொடங்கி வைத்தார். 
யானை ஊர்வலத்தில் அர்ஜுனா, பலராமா, காவிரி, வரமஹாலட்சுமி உள்ளிட்ட 12 யானைகள் கலந்து கொண்டன. நிகழாண்டு தங்கப் பல்லக்கை (அம்பாரி) அர்ஜுனா யானை 7-ஆவது முறையாக சுமந்து சென்றது. ஊர்வலத்தில் பெரும் திரளாக கலைஞர்கள் பங்கேற்ற வண்ணமயமான இசைக் குழுக்கள், நடன குழுக்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தன.
பூஜா குனிதா, தொல்லு குனிதா, கோலாட்டம், கம்சாலே, கருடகொம்பே, நகரி, கேலுகுதிரே, லம்பானி நடனம் உள்ளிட்ட கிராமிய மற்றும் கலாசார நடனங்கள், ஆடல் பாடல்கள் மக்களை உற்சாகப்படுத்தின. 
முன்னதாக, அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள நந்தி கொடிமரத்துக்கு கும்ப லக்னத்தில் பிற்பகல் 2.30 முதல் பிற்பகல் 3.40 மணி வரை முதல்வர் குமாரசாமி சிறப்பு பூஜை செய்தார். 
இந்த விழாவில், துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், உயர் கல்வித் துறை அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா, சுற்றுலாத் துறை அமைச்சர் சா.ரா.மகேஷ், கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் ஜெயமாலா, எம்.எல்.ஏ.க்கள் எச்.விஸ்வநாத், கே.மகாதேவ், மாவட்ட ஆட்சியர் அபிராம் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT