தமிழ்நாடு

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் குற்றாலத்தில் ஒன்றாக தங்கியிருக்க முடிவு: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு

DIN


டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் 18 எம்.எல்.ஏ.-க்கள் ஒன்றாக தங்கியிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்க உள்ளனர். இதனிடையே, தேசிய அளவில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் 18 எம்.எல்.ஏ.-க்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஓரிரு நாள்களில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
அதிமுகவைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.-க்கள் கொண்ட குழுவினர், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தித்துப் பேசினர். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை மாற்ற வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 19 பேருக்கும் பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அளித்தார். அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் பேரவைத் தலைவர் தனபால் இந்த நடவடிக்கை எடுத்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு: 19 பேரில் ஒருவரான ஜக்கையன் தனது கோரிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டு அரசுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, 18 எம்.எல்.ஏ.-க்களையும் இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார். பேரவைத் தலைவரின் தீர்ப்புக்கு எதிராக, 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
மூன்றாவது நீதிபதி: 18 எம்.எல்.ஏ.-க்களின் வழக்கு அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 
இரண்டு நீதிபதிகளில் ஒருவருக்கு ஒருவர் முரணான தீர்ப்புகளைக் கூறியதால், மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சத்யநாராயணா இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், நீதிபதி தீர்ப்பை எழுதி முடித்து விட்டதாகவும் ஓரிரு நாள்களில் அதாவது வரும் 24-ஆம் தேதி தீர்ப்பு வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT