தமிழ்நாடு

குட்கா ஊழல் வழக்கு: அமைச்சர், டிஜிபி வீடுகளில் சிபிஐ சோதனை

DIN


குட்கா ஊழல் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டிஜிபி தே.க.ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ் ஆகியோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
கடந்த 2013 மே 9-இல் குட்கா, போதைப் பாக்குகளுக்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தடை விதித்தார். இவற்றை விற்க, அரசு, காவல்துறை உயரதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் வழங்கப்படுவதாக திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டின.
அரசு அதிகாரிகள்: கடந்த 2016 ஜூலை 8-ஆம் தேதி வருமான வரித்துறையினர் சென்னை செங்குன்றத்தில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தாவின் குட்கா கிடங்கில் திடீர் சோதனை நடத்தினர். இச்சோதனையில் குட்கா விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கியவர்கள் குறித்த ஆவணங்கள் சிக்கின. இதில் அரசுக்கு ரூ.250 கோடி வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டறியப்பட்டது. சென்னை காவல் ஆணையராக இருந்த இப்போதைய டிஜிபி தே.க.ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட 23 காவல்துறையினர், கலால் வரித்துறையினர், மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த 2016 ஆகஸ்ட் 11-ஆம் தேதி அப்போதைய தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது. கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலா அறையில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில், குட்கா ஊழல் குறித்து சில ரகசியக் கடிதங்கள் கைப்பற்றப்பட்டன. தமிழக அரசின் உத்தரவின்பேரில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: இது தொடர்பான திமுக மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி கடந்த ஏப்ரல் 26-இல் உத்தரவிட்டது. தில்லி சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு கடந்த மே 30-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது. 
கிடங்குக்கு சீல் வைப்பு: கடந்த ஒரு மாதமாக சென்னையில் முகாமிட்டிருந்த சிபிஐ அதிகாரிகள் கடந்த 31-இல் குட்கா கிடங்குக்கு சீல் வைத்தனர்.
35 இடங்களில் சோதனை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு, மேற்கு முகப்பேரில் உள்ள தமிழக டிஜிபி தே.க.ராஜேந்திரன் வீடு, நொளம்பூரில் உள்ள சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ் வீடு, அண்ணாநகர் மேற்கில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீடு, மேற்கு மாம்பலம் மதுரை வீரன் தெரு காவலர் குடியிருப்பில் உள்ள உதவி ஆணையர் மன்னர் மன்னன் மற்றும் 3 உதவி ஆய்வாளர்கள் வீடுகளில் புதன்கிழமை காலை 7 மணியளவில் சோதனையை நடந்தது. சோதனை தொடங்கியபோது விஜயபாஸ்கரும், தே.க. ராஜேந்திரனும் தங்களின் வீடுகளில் இருந்தனர். ஜார்ஜ் வீட்டில் சோதனையின்போது அவரது உறவினர்களே இருந்ததாகக் கூறப்படுகிறது.
கடும் கட்டுப்பாடுகள்: சோதனை நடைபெற்ற இடங்களில் எவரையும் சிபிஐ அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. 
பாதுகாப்புக் கருதி, விஜயபாஸ்கர் வீட்டின் தெரு முனையிலேயே பத்திரிக்கையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பத்திரிக்கையாளர்களுக்கும், அங்கு நின்ற போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காலையில் தொடங்கிய சோதனை மாலை 5 மணி வரை நடைபெற்றது. 
முக்கிய ஆவணங்கள்: டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் சோதனையில் இரு பைகளில் ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். சோதனை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் முக்கிய ஆவணங்கள், டைரிகள், ஹார்ட் டிஸ்க்குகள், பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே, அவற்றின் விவரங்களை கூற முடியும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை முகப்பேர் மேற்கில் உள்ள டிஜிபி தே.க. ராஜேந்திரன் வீடு.
சென்னை முகப்பேர் மேற்கில் உள்ள டிஜிபி தே.க. ராஜேந்திரன் வீடு.

முதல்வருடன் டி.ஜி.பி. திடீர் சந்திப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டி.ஜி.பி. ராஜேந்திரன் புதன்கிழமை இரவு திடீரென சந்தித்தார்.
குட்கா ஊழல் தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர். சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி தே.க.ராஜேந்திரன் வீட்டிலும் சோதனை நடந்தது. 
இந்தச் சோதனையைத் தொடர்ந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை டிஜிபி தே.க.ராஜேந்திரன் புதன்கிழமை இரவு நேரில் சந்தித்துப் பேசினார்.

5 மாநிலங்களில் சோதனை
குட்கா ஊழல் தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிர மாநிலங்களில் சிபிஐயின் 500 அதிகாரிகள் 35 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். செங்குன்றம் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளரும், இப்போது தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சம்பத்தின் ஆறுமுகநேரி காவலர் குடியிருப்பு வீடு, ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள அவரது உறவினர் வீடு, விழுப்புரம் டவுன் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் வீடு, சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், லட்சுமி நாராயணன், சிவக்குமார், மத்திய கலால்துறை அதிகாரிகள் குல்சார்பேகம், எஸ்.கே.பாண்டியன், சேஷாத்திரி, விற்பனை வரித்துறை அதிகாரிகள் பன்னீர்செல்வம், குறிஞ்சிசெல்வம், கணேசன், கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

கிடங்கு தொடங்கி.... அமைச்சர் வீடு வரை...
2013 மே 9: தமிழகத்தில் குட்கா, போதைப் பாக்குகளுக்கு அரசு தடை விதிப்பு.
2016 ஜூலை 8: செங்குன்றம் கிடங்குகளில் வருமான வரித் துறை சோதனை.
2016 ஆகஸ்ட் 11: ரகசிய டைரி குறித்து வருமான வரித்துறை தமிழக தலைமைச் செயலர் டி.ஜி.பி.க்கு கடிதம்.
2017 ஆகஸ்ட் 2: விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு உத்தரவு.
2017 நவம்பர் 17: போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலா அறையில் வருமான வரித்துறையின் சோதனையில் ரகசியக் கடிதம் சிக்கியது.
2018 ஜனவரி 24: சிபிஐ விசாரிக்கக் கோரி திமுக வழக்கு.
2018 ஏப்ரல் 26: சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
2018 மே 30: தில்லி சிபிஐ அதிகாரிகள், குட்கா ஊழல் குறித்து வழக்கு.
2018 ஜூன் 22: உணவு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை.
2018 ஆகஸ்ட் 29: மாதவராவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை.
2018 ஆகஸ்ட் 31: செங்குன்றத்தில் உள்ள குட்கா கிடங்குக்கு சிபிஐ சீல்.
2018 செப்.5: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ சோதனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT