தமிழ்நாடு

சர்க்கரை நோய் பாதித்த குழந்தைகளுக்கு இலவச பரிசோதனை சாதனங்கள்: எழும்பூர் அரசு மருத்துவமனை திட்டம்

டைப் - 1 வகை சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்கும் கையடக்க மருத்துவ சாதனங்களை

தினமணி

டைப் - 1 வகை சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்கும் கையடக்க மருத்துவ சாதனங்களை (குளூக்கோ மீட்டர்) இலவசமாக வழங்க எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முடிவு செய்துள்ளது. அதற்காக, ரூ.15.20 லட்சம் மதிப்பிலான பரிசோதனை சாதனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
 அதுமட்டுமன்றி, சர்க்கரை அளவைப் பரிசோதிப்பதற்குத் தேவையான "ஸ்ட்ரிப்'களையும் சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு மாதந்தோறும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு அந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 பொதுவாக, குழந்தைகளுக்கு வரும் டைப் - 1 சர்க்கரை நோய்க்கு தீவிர கண்காணிப்பு தேவை. அந்த வகை பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளுக்கு நாள்தோறும் இன்சுலின் ஊசிகள் போட வேண்டியது அவசியம்.
 அவர்களது ரத்தத்தின் சர்க்கரை அளவானது திடீரென உயர்ந்தும், குறைந்தும் போக வாய்ப்புள்ளதால் அனுதினமும் அதனைப் பரிசோதிக்க வேண்டியதும் கட்டாயம். ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை சாதனங்களைப் பொருத்தவரை ரூ.1,000 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
 அதேவேளையில், ஒவ்வொரு முறையும் ரத்தப் பரிசோதனை செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஸ்ட்ரிப்களின் விலை அதைக் காட்டிலும் அதிகமாகும். அதற்காக மட்டுமே மாதந்தோறும் பல ஆயிரம் செலவிட வேண்டும்.
 இந்நிலையில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெறும் டைப் - 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இலவசமாக ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை சாதனங்கள் வழங்கப்படவிருக்கிறது.
 இதுகுறித்து, மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் அரசர் சீராளர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் பூவழகி ஆகியோர் கூறியதாவது:
 டைப் - 1 சர்க்கரை நோய் பாதிப்பு விகிதம் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஒரு லட்சம் குழந்தைகளில் 3 பேருக்கு அந்தப் பாதிப்பு இருந்தது. தற்போது அது 10 - ஆக அதிகரித்துள்ளது.
 பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் டைப்-1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டால், அதற்கான சிகிச்சை செலவுகளை சமாளிப்பது மிகக் கடினம். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 850 குழந்தைகள் அந்த வகை பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.
 அவர்களில் சுமார் 400 குழந்தைகள் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தொடர் சிகிச்சையும், இன்சுலின் மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
 இருந்தபோதிலும், தினந்தோறும் ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு தேவைப்படும் சாதனங்களை ஒவ்வொரு குழந்தைகளுக்கும் வழங்குவது என்பது இயலாத காரியமாக இருந்து வந்தது.
 இந்த நிலையில், குழந்தைகளின் நலன் கருதி அந்த வகை சாதனங்களை கொள்முதல் செய்து வழங்குவதற்கான சிறப்பு அனுமதி அரசிடம் இருந்து பெறப்பட்டது. இதற்காக ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டொன்றுக்கு ரூ.3,800 வரை செலவிடப்பட உள்ளது. அந்த சாதனங்களை வழங்குவதன் மூலம், நாள்தோறும் தங்களது குழந்தைகளின் உடல்நிலையை, ரத்த சர்க்கரை அளவை வீட்டிலிருந்தபடியே பெற்றோர்கள் கண்காணிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT