தமிழ்நாடு

தொடர் விடுமுறை: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

DIN


தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவிலான மக்கள்  தங்கள் சொந்த ஊருக்குச் சென்றதால் சென்னையில் புதன்கிழமை (ஏப். 16) கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மகாவீர் ஜெயந்தி, மக்களவைத் தேர்தல், புனிதவெள்ளி தொடர் விடுமுறை, பள்ளிகளுக்கான விடுமுறை காரணமாக சென்னையில் தங்கி உள்ள பெரும்பாலான மக்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊருக்கு செவ்வாய்க்கிழமையிலிருந்தே   பயணம் செய்யத்  தொடங்கினர். அதிக அளவிலான மக்கள் ஊருக்குச் செல்லக் கூடும் என்பதால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,965 பேருந்துகளுடன் செவ்வாய்க்கிழமை 850 பேருந்துகளும், புதன்கிழமை 1,500 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட்டன. கடந்த இரண்டு நாள்களும் காலை முதல் நள்ளிரவு 2 மணி வரையிலும் பேருந்துகள் அதிகமான பயணிகளுடனேயே  இயக்கப்பட்டன. 
வாக்குப் பதிவு காரணமாக பல தனியார் நிறுவனங்கள் வியாழக்கிழமை ( ஏப்.18) விடுமுறை அளித்ததால் வெளியூர்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமையை விட புதன்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக புதன்கிழமை மட்டும் சென்னையில் இருந்து பல்வேறு  பகுதிகளுக்கு சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு மூலம் பயணித்துள்ளனர். 
போக்குவரத்து நெரிசல்: பேருந்து நிலையங்கள் அமைந்துள்ள கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பண்டிகை காலங்களில் போக்குவரத்தை சீர்செய்வதற்காக அதிக அளவிலான காவலர்கள் பணியமர்த்தப்படுவர். தற்போது, தொடர் விடுமுறையோடு தேர்தலும் நடைபெறுவதால் பெரும் எண்ணிக்கையிலான காவலர்கள்  தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் தொய்வு  ஏற்பட்டது என்றார். 
பயணிகள் மீது தடியடி 
வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளுக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போதிய அளவில் பேருந்து இயக்கப்படவில்லை என கூறியும், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்கு 1, 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு, புனித வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை உள்ளதால் சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவியத் தொடங்கினர். ஆனால் அதற்கேற்றவாறு போதுமான பேருந்துகள் போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டினர். 
வேலூர் , ஆற்காடு , காஞ்சிபுரம் , புதுச்சேரி, திண்டிவனம் ஆகிய ஊர்களுக்கு மிகவும் குறைவாகவே பேருந்துகள் இயக்கப்படுவதாக பயணிகள் தெரிவித்தனர். நள்ளிரவு 12.30 மணியைத் தாண்டியும் கூட பேருந்துகள் இயக்கப்படாததால் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் சில இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

நாசிக் : விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானம் !

ம.பி.யில் பாஜக வெற்றி!

2 லட்சம் வாக்குகள் முன்னிலையில் ஹேம மாலினி!

வாக்கு எண்ணிக்கை மந்தமாக காரணம் என்ன? காங்கிரஸ்

SCROLL FOR NEXT