தமிழ்நாடு

சித்ரா பௌர்ணமி விழா: திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் கிரிவலம்

DIN


சித்ரா பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரர்,  உண்ணாமுலையம்மன், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகளில் வழிபட்டனர்.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. குறிப்பாக, சித்ரா பௌர்ணமி நாளில் கிரிவலம் வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே, தீபத் திருவிழாவுக்கு அடுத்த படியாக சித்ரா பௌர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவர்.
சித்ரா பௌர்ணமி: அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமி வியாழக்கிழமை (ஏப்.18) மாலை 7.05 மணிக்குத் தொடங்கி, வெள்ளிக்கிழமை மாலை 5.35 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்து இருந்தது. ஆனால், வியாழக்கிழமை காலை முதலே திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர். பகல் 12 மணிக்கு கொளுத்தும் வெயிலையும் பொருள் படுத்தாமல் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். மாலை 7 மணிக்குப் 
பிறகு கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தொடர்ந்து, விடிய, விடிய வெள்ளிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
பக்தர்களில் பலர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை ஆதிஅருணாசலேஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அமர்வு தரிசனம் ரத்து: வியாழக்கிழமை (ஏப்.18) அதிகாலை 5 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோயில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து இரவு நடை சாற்றும் வரை மூலவர் சன்னதி திறந்தே இருந்தது. அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் சன்னதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
9 தற்காலிகப் பேருந்து நிலையங்கள்: கிரிவல பக்தர்கள் நலன் கருதி திருவண்ணாமலை நகரைச் சுற்றி 9 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இங்கிருந்து தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 2, 895 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.தற்காலிகப் பேருந்து நிலையங்களில் திருவண்ணாமலை நகராட்சி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் சார்பில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
324 கண்காணிப்பு கேமராக்கள்: குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும், அருணாசலேஸ்வரர் கோயில் வளாகத்தில் 120 இடங்கள், திருவண்ணாமலை நகரில் 80 இடங்கள், கிரிவலப்பாதையில் 89 இடங்கள் உள்பட மொத்தம் 324 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT