தமிழ்நாடு

சட்டவிரோத பேனர்: அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

DIN

முறையான அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் சட்டவிரோத பேனர்களை வைக்கக் கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 
 தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு முறையாக அமல்படுத்தவில்லை எனக்கூறி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன்,  பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,  தமிழகத்தில் பொதுமக்களால் போலீஸார் தாக்கப்படும் சம்பவம் அதிகம் நடைபெறுகிறது. இது தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளதைக் காட்டும் அறிகுறியாகும். 
போலீஸார் மீது பொதுமக்கள் ஏற்கெனவே நம்பிக்கை இழந்துவிட்ட நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நீடித்தால், மிகப் பெரிய பேரழிவுகளை இந்தச் சமுதாயம் சந்திக்க நேரிடும். சட்ட விரோத பேனர் விவகாரத்தில், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை. 
சமீபத்தில் கூட அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்காக கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரை சட்ட விரோதமாக 70 பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சாலையின் மையப்பகுதியில் இந்த பேனர்களை வைக்க எப்படி அனுமதி அளிக்கப்பட்டது. 
இந்த பேனர்கள் வைக்கும்போது அவற்றைத் தடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸாரும் என்ன செய்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர் அந்த பேனர்களை அகற்றுவதால் என்ன பயன் என கேள்வி எழுப்பினர்.
சட்ட விரோத பேனர்களைத் தடுக்க அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக அரசியல் கட்சியினர் செயல்பட வேண்டும். முறையான அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் சட்டவிரோத பேனர்கள் வைக்கக் கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும். சட்டவிரோத பேனர் விவகாரத்தில் அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் வழங்கும் கடைசி வாய்ப்பாகும் இது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை வரும் செப்டம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT