தமிழ்நாடு

குடிநீர் தொட்டியில் விஷம் கலப்பு: 37 பேர் மருத்துவமனையில் அனுமதி

DIN


விருத்தாசலம் அருகே விஷம் கலந்த குடிநீரை அருந்தியவர்கள் உள்பட 37 பேர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த டி.வி.புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவரது மனைவி அஞ்சுகம் (30). தம்பதிக்கு ரெமோ, அஞ்சலி, ராம்போ, ரோகித் ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். புதன்கிழமை இவருடைய வீட்டுக்குப் பின்புறமுள்ள கிராம குடிநீர் இணைப்புக் குழாயில் அஞ்சுகம் குடிநீர் பிடித்தாராம். அப்போது, நீரில் மருந்து வாசம் வீசிய நிலையில், அந்த நீரைப் பிடித்துச் சென்று அதில் தேநீர் தயாரித்தாராம். அதை தனது குழந்தைகளுக்கு கொடுத்ததுடன், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கும் கொடுத்தாராம். தேநீரைப் பருகிய சிறிது நேரத்தில், அஞ்சுகம் மற்றும் 7 குழந்தைகளும் மயக்கமடைந்து கீழே விழுந்தனராம். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் கவியரசன், கருவேப்பிலங்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதில், அந்தப் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குடிநீர்த் தொட்டியில் குருணை என்ற பூச்சிக் கொல்லி மருந்து கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.  இதையடுத்து, அந்தத் தொட்டியில் உள்ள குடிநீர் முழுவதும் உடனடியாக வெளியேற்றப்பட்டது. மேலும், வேறு யாரும் இந்தத் தொட்டியில் பிடித்த தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தண்டோரா மூலம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விஷம் கலந்த நீரைப் பருகியதாக அச்சமடைந்த சிலர், தங்களுக்கும் மயக்கம் ஏற்படுவதாகக் கூறி, அரசு மருத்துவமனைகளில் சேர்ந்தனர். இதையடுத்து, 37 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, அந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களை கள்ளங்குறிச்சி ஆரம்ப சுகாதார துறை மருத்துவர்கள் பரிசோதித்தனர். ரமேஷ் என்பவருக்கும், அவரது உறவினருக்கும் ஏற்பட்ட தகராறில் அவரைப் பழிவாங்கும் நோக்கில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்றும், செவ்வாய்க்கிழமை இரவு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, குடிநீர் தொட்டியில் குருணை மருந்து கலக்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT