தமிழ்நாடு

நிலவில் சந்திரயான்-2 சுற்றுவட்டப் பாதையை குறைக்கும் நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவேற்றம்

DIN


நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்து அங்கு வலம் வந்துகொண்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலத்தின், சுற்றுவட்டப் பாதையை குறைக்கும் நடவடிக்கையை இஸ்ரோ விஞ்ஞானிகள் புதன்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
அடுத்ததாக, வரும் 28-ஆம் தேதி சுற்றுவட்டப் பாதை குறைப்பு நடவடிக்கையை விஞ்ஞானிகள் மீண்டும் மேற்கொள்ள உள்ளனர்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2, புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி, கடந்த 14-ஆம் தேதி நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது.
ஆறு நாள்கள் பயணத்துக்குப் பின்னர், விண்கலத்தை நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழைக்கும் முயற்சியை திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை காலை 9.02 மணிக்கு விஞ்ஞானிகள் வெற்றிகரமாக மேற்கொண்டனர். அதன் மூலம், நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த விண்கலம், நிலவில் இருந்து குறைந்தபட்சம் 114 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 18,072 கி.மீ. தொலைவையும் கொண்ட பாதையில் வலம் வந்தது.
இந்த நிலையில், விண்கலத்தின் முதல் சுற்றுவட்டப் பாதையின் அளவைக் குறைக்கும் நடவடிக்கையை புதன்கிழமை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக மேற்கொண்டனர். திட்டமிட்டபடி பகல் 12.50 மணிக்கு விண்கலத்தில் உள்ள என்ஜினை 20 நிமிடங்கள் இயக்கி, நிலவை வலம் வரும் விண்கலத்தின்  சுற்றுவட்டப் பாதையைக் குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  அதன் மூலம், விண்கலம் இப்போது நிலவிலிருந்து குறைந்தபட்சம் 118 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 4,412 கி.மீ. தொலைவையும் கொண்ட சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. விண்கலத்தின் செயல்பாடுகள் இப்போது சிறப்பாக இருக்கின்றன என இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி காலை 5.30 மணியளவில் இரண்டாவது சுற்றுவட்டப் பாதை குறைப்பு நடவடிக்கையை விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளனர். அதன் பிறகு செப்டம்பர் 1-ஆம் தேதி வரை மேலும் 2 முறை சுற்றுவட்டப் பாதை அளவு குறைக்கப்பட்டு, இறுதியாக நிலவின் பரப்பிலிருந்து 100 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் சுற்றிவரும் வகையில் நிறுத்தப்படும்.
பின்னர், செப்டம்பர் 2-ஆம் தேதியன்று ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் அமைப்பு பிரித்துவிடப்படும். அவ்வாறு பிரித்துவிடப்பட்ட பின்னர் மேலும் 2 முறை சுற்றுப்பாதை குறைக்கப்பட்டு, செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை நிலவின் பரப்பில் மெதுவாக லேண்டர் தரையிறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT