தமிழ்நாடு

நாட்டின் முதலாவது பறவைகள் சூழல் நச்சுத்தன்மை ஆராய்ச்சி மையம்: ஆனைகட்டியில் திறப்பு

DIN

கோவை மாவட்டம், ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவையியல், இயற்கை வரலாற்று ஆராய்ச்சி மையத்தில் பறவைகள் சூழல் நச்சுத்தன்மைக்கான நாட்டின் முதலாவது ஆராய்ச்சி மையம் சனிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
 

மும்பையைச் சேர்ந்த பறவைகள் ஆராய்ச்சியாளர் சலீம் அலியின் பெயரில் ஆனைகட்டியில் கடந்த 1990-ஆம் ஆண்டில் இந்த மையம் ஏற்படுத்தப்பட்டது. உணவுச் சங்கிலியின் அடி முதல் நுனி வரை தொடர்பில் உள்ள பறவைகளைக் காப்பதன் மூலம் மனிதர்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த மையம் தொடங்கப்பட்டது.
 

இயற்கைக்கு மாறான பறவைகளின் இறப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்கான நவீன கருவிகள் இந்தியாவில் இல்லாத குறையைப் போக்கும் விதமாகவும், சுற்றுச்சூழலில் தொடர்ச்சியாக, புதிய வேதிப்பொருள்கள் கலப்பதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து ஆய்வு செய்ய ஏதுவாகவும் ரூ.4 கோடி செலவில் லிக்விட் குரோமாடோகிராப் - மாஸ் ஸ்பெக்டோமீட்டர், கியாஸ் குரோமாடோகிராப், அடாமிக் அப்சார்ப்ஷன் ஸ்பெக்டோமீட்டர் போன்ற அதிநவீன கருவிகளுடன் இந்த சூழல் நச்சுத்தன்மைக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது.
 

இதன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள், கனமான உலோகங்கள், ஹைட்ரோகார்பன்கள், சாயக் கழிவுகள் ஆகியவற்றால் பறவைகளுக்கு ஏற்படும் அபாயமான தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய முடியும். பறவைகளின் தனித்தனி இனங்கள் ரசாயனக் கழிவுகளால் பாதிக்கப்படுவது குறித்தும், தேவைப்பட்டால் அவை மக்களோடும், சமூகத்தோடும் கொண்டுள்ள தொடர்பு குறித்தும் இந்த மையம் ஆய்வு செய்யும்.
 

பறவைகளின் இறப்பு விகிதம் அதிகரித்து இனப்பெருக்க அளவு குறைவது தொடரும் நிலையில், இதற்கான சுற்றுச்சூழல் காரணங்கள் குறித்து ஆய்வு செய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அண்மைக் காலத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த சுமார் 125 பறவை இனங்களின் சூழல் பாதிப்புத் தன்மை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சாரஸ் கொக்கு, டெமாய்சில் கொக்கு, ராஜாளி, நாரை போன்றவை அவற்றில் சிலவாகும். சூழல் நச்சு இயல் ஆய்வில் வேதிப் பகுப்பாய்வு ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். உயிரியல், உயிரியல் சாராத வகையிலான ரசாயனங்களின் அளவை ஆய்வு செய்வதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.
 

சலீம் அலி ஆராய்ச்சி மையத்துக்கு அந்தமான், சிக்கிம், ஆந்திரம், ராஜஸ்தான், கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 7 கள ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் சேகரிக்கப்படும் இறந்த பறவைகளின் உடல், இறகுகளைக் கொண்டு அவற்றின் இறப்புக்கான காரணத்தை இந்த மையம் ஆராயும்.
 

இந்த ஆய்வின் முடிவுகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பி, பாதிக்கப்படும் பறவைகளைக் காப்பதற்கான கொள்கை முடிவுகளை வகுக்க வலியுறுத்தும். இந்த ஆராய்ச்சி மையத்துக்குப் பொதுமக்களும் உதவலாம். ஏதேனும் ஒரு பறவை நோய்வாய்ப்பட்டிருந்தாலோ, இறந்துகிடந்தாலோ அது தொடர்பாக இந்த ஆராய்ச்சி மையத்துக்குத் தகவல் தெரிவிக்கலாம். மேலும், அதைக் குளிரூட்டப்பட்ட தெர்மாகோல் பெட்டியில் வைத்து சலீம் அலி பறவையியல் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பிவைத்தால், அதற்கான செலவையும் இந்த மையமே திருப்பி வழங்கிவிடும் என்று மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT