தமிழ்நாடு

நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்மழை: வைகை அணை நீர்மட்டம் 50.30 அடியாக உயர்வு

DIN

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சனிக்கிழமை வைகை அணையின் நீர்மட்டம் 50.30 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 10 மாதங்களுக்கு பிறகு படிப்படியாக உயர்ந்து வருகிறது.
 கேரளம் மற்றும் தேனி மாவட்டத்தில் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக 10 மாதங்களுக்கு பின்னர் வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் வைகை அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 50.30 அடியாக உயர்ந்துள்ளது.
 நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இந்த ஆண்டு வைகை அணை நீர்மட்டம் அதன் முழுக்கொள்ளளவை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 மதுரை மாவட்டம் மேலூர் பகுதி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது முதல்போக பாசனத்திற்கும், வடகிழக்கு பருவமழை தொடங்கும் அக்டோபர் மாதத்தில் இரண்டாம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படும்.
 ஆனால் நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை மிகவும் தாமதமானதால் விவசாயிகள் கவலையடைந்து வந்தனர். தற்போது வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 தற்போதைய நிலையில் வைகை அணையில் இருந்து மதுரை மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக விநாடிக்கு 60 கனஅடி மட்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது. சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 50.30 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,285 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 2,032 மில்லியன் கனஅடியாக உள்ளது.
 முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.20 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 641 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து 1,650 கன அடி தண்ணீர் வெளியேற்றபட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 4,545 மில்லியன் கன அடியாக உள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT