தமிழ்நாடு

ஜெயலலிதாவின் சொத்துக்களை எங்களிடம் ஒப்படையுங்கள்: தீபக், தீபா வாதம்

DIN


சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை அவரது குடும்ப வாரிசான எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவரது அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க ஒருவரை நியமிக்க கோரிய வழக்கில், ஜெயலலிதாவின் உறவினர்கள் தீபா, தீபக் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர்.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றக் கூடாது என்று தீபா, தீபக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. போயஸ் கார்டனை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும், போயஸ் கார்டன் வீட்டுக்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும், வலியுறுத்தினர்.

இதையடுத்து போயஸ் கார்டனுக்குள் தீபக் மற்றும் தீபாவை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மக்களால் நான் மக்களுக்காக நான் என்று எப்போதும் கூறும் ஜெயலலிதாவின் சொத்துக்களில் சிலவற்றை ஏழைகளுக்கு ஏன் அளிக்கக் கூடாது என்றும் விசாரணையின் போது நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

அதே சமயம், போயஸ் கார்டன்  உள்ளிட்ட ஜெயலலிதாவின் சொத்துகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், போயஸ் கார்டனுக்குள் எங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் தீபக் மற்றும் தீபா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், ஜெயலலிதா இறந்தவுடன் ஏன் சொத்துக்கு உரிமை கோரி நீதிமன்றத்தை நாட வில்லை என்று கேள்வி எழுப்பினர்.

வழக்கின் விவரம்: 

சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகி புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.913 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை உயர்நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி, செல்வ வரி பாக்கிக்காக  அவரது போயஸ் தோட்ட இல்லம், ஹைதராபாத் பங்களா உள்ளிட்ட சில சொத்துகளை முடக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,  மனுதாரர் தரப்பில், ஆஜரான வழக்குரைஞர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது மறைவுக்குப் பின்னர் தனது சொத்துகள் யாருக்குச் சென்றடைய வேண்டும் என உயில் ஏதும் எழுதி வைக்கவில்லை. எனவே, அவரது சொத்துகளை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகளை நிர்வாகியாக நியமிக்க வேண்டும் என வாதிட்டார்.

குறுக்கிட்ட நீதிபதிகள், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் போயஸ் தோட்ட இல்ல வீடு யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என கேள்வி எழுப்பினர். அப்போது, அந்த வீடு தற்போது  சென்னை மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது,  தீபா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகள் போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில் நடைபெற்றன. ஆனால்,  அதன்பிறகு தீபாவும், தீபக்கும் போயஸ் தோட்ட வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.  ஜெயலலிதா கடந்த 1996-இல் கடனாகப் பெற்ற ரூ. 2 கோடி, தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ.20 கோடியாக உயர்ந்துள்ளது என்றார். அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி ரூ.40 கோடி, அதற்காக வருமான வரித்துறை அவரது போயஸ் தோட்ட இல்லத்தை முடக்கி வைத்துள்ளது. மேலும், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அந்த வீட்டை அளவிட கால தாமதமாகிறது என்றார்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், வருமான வரித் துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்து பலரைக் கைது செய்கின்றனர். வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன. எனவே, வருமான வரித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாமே என கருத்து தெரிவித்தனர்.  இந்த வழக்கை அனைவரும் கவனிக்கின்றனர். எனவே, ஜெயலலிதாவின் சொத்துகள் தொடர்பாக வழக்குத் தொடர்ந்தது குறித்து தெரிந்து கொள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT