தமிழ்நாடு

மறைந்த தலைவருக்கு நினைவு வளைவு அமைப்பதுதான் வளர்ச்சிப் பணியா? : அரசுக்கு நீதிமன்றம் கேள்வி 

DIN

சென்னை: மறைந்த தலைவருக்கு நினைவு வளைவு அமைப்பதுதான் வளர்ச்சிப் பணியா?  என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

எம்.ஜி.ஆர்., பிறந்த தினத்தை ஒட்டி, சென்னை கடற்கரை சாலையில் அவரது பெயரிலான நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வேலைகளைத் துவக்கியது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தினேஷ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்றில், தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தின்படி சாலைகளின் குறுக்காக எந்த விதமான நிரந்தர கட்டுமானங்களையும் கட்டக்கூடாது. ஆனால் அரசியல் ஆதாயத்துக்காக கட்டப்பட்டு வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு திறப்பு விழாவுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எம்.ஜி.ஆர் நினைவு வளைவு திறப்பு விழாவுக்கு அனுமதி வழங்க முடியாது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து விட்டால், அந்த நினைவு வளைவுக்கு மேல் சுற்றப்பட்டுள்ள பச்சை நிற திரைச்சீலையை மட்டும் அகற்றிக் கொள்ளலாம். ஆனால் இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை விழா எதுவும் நடத்தக் கூடாது என உத்தரவிட்டனர்.

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த தினம் கடந்த மாதம் ஜனவரி 17-ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை ஒட்டி, எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு நினைவு வளைவைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நினைவு வளைவினை விழா ஏதும் இல்லாமல் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. 

அதன்படி, அவரது பிறந்த தினத்தன்று நினைவு வளைவின் மீது சுற்றப்பட்டிருந்த பச்சை நிற திரைச் சீலை அகற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி விழா ஏதும் இல்லாமல் நூற்றாண்டு நினைவு வளைவு திறக்கப்பட்டது.

இந்நிலையில் மறைந்த தலைவருக்கு நினைவு வளைவு அமைப்பதுதான் வளர்ச்சியா? என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு செவ்வாயன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சென்னை மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இந்த சாலை மாநகரட்சிக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்றும், அந்த விதியின் படி வளைவு அமைக்கும் வளர்ச்சி பணி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து நீதிபதிகள் கூறியதாவது:

மறைந்த தலைவருக்கு நினைவு வளைவு அமைப்பதுதான் வளர்ச்சிப் பணியா? அரசு நிலத்தை அரசே ஆக்கிரமிக்கக் கூடாது. இப்படி வளைவுகள் மேல் வளைவாக அமைத்துக் கொண்டே போனால் நாட்டில் உள்ள சிலைகள் போலவே வளைவுகளில் எண்ணிக்கையும் அதிகரித்து விடும். எனவே சென்னையில் உள்ள சாலைகள் தொடர்பான முழுமையான விபரங்களைத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்.

இவ்வாறு அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT