தமிழ்நாடு

நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

DIN


நாகையை அடுத்த நாகூரில் உள்ள பாதுஷா சாகிபு ஆண்டவர் தர்காவின் 462 -ஆம் ஆண்டு கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலம் வெள்ளிக்கிழமை (பிப்.15) இரவு நடைபெற்றது.
ஆன்மிக மகிமைகளால் உலகப் புகழ் பெற்ற தர்காக்களில் ஒன்றாகவும், மதங்களைக் கடந்து, மனிதம் போற்றும் வழிபாட்டுத் தலமாகவும் விளங்குகிறது பாதுஷா சாகிபு நாகூர் ஆண்டவர் தர்கா. இங்கு, ஆண்டுதோறும் கந்தூரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இதன்படி,  நாகூர் தர்காவின் 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா பிப்ரவரி 6-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 
நாகூர், நாகைப் பகுதிகளில் வடிவமைக்கப்பட்ட அலங்கார அமைப்புகள், நாகை அபிராமி அம்மன் திடல் அருகே வெள்ளிக்கிழமை மாலை ஒருங்கிணைக்கப்பட்டன.  
பாரம்பரிய முறைப்படியான வழிபாடுகளுக்குப் பின்னர், இரவு 7 மணிக்கு அங்கிருந்து சந்தனக் கூடு ஊர்வலம் தொடங்கியது. 
இன்னிசை வாத்திய முழக்கங்களுடனும், இறைப் புகழ்ச்சிப் பாடல்களுடனும், 20-க்கும் மேற்பட்ட அலங்கார வாகனங்களின் அணிவகுப்புகளுடன், கண்கவர் வேலைப்பாடுகளுடன் கூடிய சந்தனக் கூடு,  நாகை சர் அகமது தெரு, புதுத் தெரு, பெரியக் கடைத் தெரு, அரசு மருத்துவமனைச் சாலை, பப்ளிக் ஆபீஸ் ரோடு, வெளிப்பாளையம், காடம்பாடி வழியே,  பாரம்பரியமான பாதைகளில் வலம் வந்தது. 
பிரம்மாண்ட அளவிலான வாத்தியக் கருவிகளுடன், கேரள செண்டை மேளம், தப்ஸ், தப்பு என பல்வேறு வகையான வாத்திய முழக்கங்களுடனும், இறைப் புகழ்ச்சிப் பாடல்களுடனும் இந்த ஊர்வலம் நடைபெற்றது. 
வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள், சந்தனக் கூடு மீது மலர்களைத் தூவி வழிபட்டனர்.  
இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
நாகை மாவட்டக் காவல் துறை சார்பில் சுமார் 1,000-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சந்தனக் கூடு ஊர்வலத்தையொட்டி,  நாகப்பட்டினம் - காரைக்கால் வழித்தடத்தில், நாகூர் வழியேயான சாலைப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் கிழக்குக் கடற்கரை சாலையில் திருப்பிவிடப்பட்டன.
சந்தனம் பூசும் விழா... சந்தனக் கூடு ஊர்வலம் தர்காவின் அலங்கார வாசலை அடைந்த பின்னர், பாரம்பரிய முறைப்படி சந்தனக் குடம் தர்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, சனிக்கிழமை அதிகாலை நாகூர் பாதுஷா சாகிபு ஆண்டவரின் புனித ரவுலா ஷரீபுக்கு சந்தனம்பூசப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT