தமிழ்நாடு

தேவாரம், திருவாசகத்துக்கு இசை வடிவம்: முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்

DIN

தேவாரம், திருவாசகப் பாடல்களை இசை வடிவில்  மக்களிடம் எடுத்துச் செல்ல தமிழ்நாடு இசை, கவின் கலைப் பல்கலைக் கழகம் முன்வர வேண்டும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
சென்னையில்  தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பலைக்கழகத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஜெயம் 2019 நிறுவனர் நாள்  விழாவில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:
மனிதன் மனிதனாக வாழ்ந்தால்  கடவுளாகவே கருதப்படுவான். அந்தத் தன்மையை அடைவதற்கு முதலில் நாம் அனைவரும் ஒன்று என்ற எண்ணம் உருவாக வேண்டும். 
நம் அனைவரையும் ஒன்றச் செய்யும்  ஆற்றல் இசைக்கு உண்டு. இசை என்பது நம் குடும்பங்களில் ஒன்றிப்போன அம்சமாகும். சோர்வையும், கவலையையும், கோபத்தையும், பகையையும் போக்கும் சக்தி இசைக்கு மட்டுமே உள்ளது.
நான் மிகவும் ரசித்தவை: தமிழகத்தில் பிறந்து, தமிழிலேயே பாசுரங்கள் இயற்றிய பன்னிரு ஆழ்வார்கள் வழங்கிய நாலாயிர திவ்யபிரபந்தம், சைவ சமயக்குறவர்கள் என்று அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் அருளிய தேவாரம், திருவாசகத்தை இசை வடிவங்களாக மிகவும் ரசித்துக் கேட்டிருக்கிறேன். 
இசை, நாடகம், நாட்டியம், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் நுழைவு வாயிலாக, கலை பண்பாட்டுத் துறையை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1991-இல் ஏற்படுத்தினார். மேலும், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழகத்தை தோற்றுவித்தவரும் அவர்தான். 
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருவையாறு ஆகிய இடங்களில் இசைக் கல்லூரிகளும், பல்வேறு இடங்களில் இசைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. சில இடங்களில் மாலை நேர இசைக் கல்லூரிகளும், பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
தமிழ் இசை: சென்னை நகரமானது தமிழிசை, பஜனை இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மெல்லிசை, கிராமிய இசை, மேற்கத்திய இசை உள்ளடக்கிய கலைஞர்களைக் கொண்டதாக விளங்குகிறது. 
மார்கழி மாதம் நடைபெறும் இசை விழாவில், இந்தியா மற்றும் வெளிநாட்டில் இருந்து கலைஞர்கள் பங்கேற்பதால் சென்னை மாநகரம் பெருமை பெற்றுள்ளது. 
இதனைக் காண எண்ணற்ற இசை ரசிகர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து இசை விழா நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் கண்டு களித்து வருகிறார்கள். 
படைப்பாக்கம், இசைக்கான பங்களிப்பு ஆகியவற்றுக்கான சிறப்புப் பட்டியலில் இப்போது உலக அளவில் சென்னையை யுனெஸ்கோ அமைப்பு தேர்வு செய்து அங்கீகரித்துள்ளது.
தேவை இசை வடிவம்:  தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம், தமிழ் இசைப் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்ச்சிகளை அதிகளவில் நடத்தி, மக்களுக்கு  அந்த இசை எளிதில் சென்றடைய உறுதுணையாக இருக்க வேண்டும். 
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், தேவாரம், திருவாசகம் ஆகிய பாசுரங்களை இசை வடிவில் மக்களிடம் கொண்டு செல்வதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
இந் நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், க.பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மக்களவை உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன் வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் பிரமீளா குருமூர்த்தி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT