தருமபுரி அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை திறப்பு
தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையை தமிழக முதல்வர்
தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தலைமை வகித்தார்.
இவ் விழாவில், ஜெயலலிதா உருவச் சிலையை திறந்து வைத்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: அ.தி.மு.க.வைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்த 11 ஆண்டுகளில் ஏழை, எளிய மக்களுக்கான எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினார். இதனால், ஏழை மக்கள் ஏற்றம் பெற்றனர். அவரைத் தொடர்ந்து, தமிழகத்தில் 6 முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தார். மக்களுக்காகவே உழைத்து மறைந்தவர் ஜெயலலிதா.
தருமபுரி அ.தி.மு.க. அலுவலகத்தில் ஏற்கெனவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். சிலையைத் திறந்து வைத்தார். தற்போது, அதே அலுவலகத்தில் ஜெயலலிதா உருவச் சிலையை திறந்து வைக்கும் பேறு எனக்கு கிடைத்துள்ளது. அவர்கள் இருவரும் காட்டிய வழியில் மக்கள் துணையோடு தற்போது கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி வருகிறோம் என்றார்.
திறந்த வாகனம்: சேலத்திலிருந்து தருமபுரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, விழா நடைபெறும் இடத்துக்குச் சிறிது தொலைவில் தனது காரிலிருந்து இறங்கி, தருமபுரி கட்சி அலுவலகத்துக்குச் சொந்தமான திறந்த ஜீப்பில் நின்று, மக்களை நோக்கி கைகளை அசைத்தவாறு வந்தார். இதையடுத்து, கட்சி அலுவலகத்துக்கு வந்த அவரை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா உருவச் சிலையை அவர் திறந்து வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல, அருகிலிருந்த எம்ஜிஆர் உருவச் சிலைக்கும் மாலை அணிவித்து முதல்வர் மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, அலுவலக வாயிலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றவாறு உரையாற்றினார்.
முன்னதாக, தருமபுரி மாவட்ட எல்லையான தொப்பூரில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி மலர்க்கொத்து அளித்து வரவேற்றார். அதேபோல, அ.தி.மு.க.வினரும், நல்லம்பள்ளி அருகே சேஷம்பட்டியில் பா.ம.க.வினரும் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர்.