தமிழ்நாடு

உதகை கோடை விழா: மே 17 முதல் மலர்க்காட்சி

DIN


உதகையில் கோடை விழாவையொட்டி நடப்பாண்டில் மே 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு மலர்க்காட்சி விழா நடத்துவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உதகையில் உள்ள அரசினர் தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும்  கோடை சீசனையொட்டி மே 3-ஆவது வாரத்தில் மலர்க்காட்சி விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த மலர்க்காட்சியைக் காண இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவர். 
இந்த  மலர்க்காட்சிக்கான ஏற்பாடு தொடர்பாக ஆலோசிக்க மலர்க்காட்சி குழு அமைக்கப்பட்டு அக்குழுவே தேதி உள்ளிட்ட  அனைத்து அம்சங்களையும் இறுதி செய்யும். நடப்பாண்டில் இக்குழுவின் தலைவராக தோட்டக்கலைத் துறை இயக்குநர் டாக்டர் என்.சுப்பையன், துணைத் தலைவராக நீலகிரி மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, செயலராக தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். 
இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் உதகையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் தோட்டக்கலைத் துறை இயக்குநர் சுப்பையன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையினரால் நடத்தப்படும் விழாக்களில் முக்கிய நிகழ்வான 123-ஆவது கோடைவிழா உதகை மலர்க்காட்சி, அரசினர் தாவரவியல் பூங்காவில் மே 17-ஆம்தேதி முதல் 21-ஆம்தேதி வரை 5 நாள்களுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61-ஆவது பழக்காட்சி மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரண்டு நாள்களுக்கு நடத்தப்படும்.  
உதகையில் நடத்தப்படவுள்ள 17-ஆவது ரோஜா கண்காட்சி,  கோத்தகிரியில் நடத்தப்படவுள்ள 11ஆவது காய்கறி கண்காட்சி மற்றும் கூடலூரில் நடத்தப்படவுள்ள 9-ஆவது வாசனை திரவியக் கண்காட்சி ஆகியவற்றிற்கான தேதிகள் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. எதிர்வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியான பின்னரே இந்நிகழ்ச்சிகளுக்கான தேதிகள் முடிவு செய்யப்படும்.
உதகை புறநகர்ப் பகுதியான 9-ஆவது மைல் பகுதியில் அமைக்கப்பட்டு வரும்  தோட்டக்கலைத் துறையினரின் கூடுதல் பூங்கா, இயற்கை புல்வெளி பூங்காவாக அமைக்கப்படும். இதற்காக முதற்கட்டமாக  ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  
கடந்த ஆண்டில் கர்நாடக மாநிலத்தின் சட்டப் பேரவைத் தேர்தல், கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம், தமிழகத்தில் வீசிய கஜா புயல் உள்ளிட்ட காரணங்களால் தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருந்தது. ஆனால், நடப்பாண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT