தமிழ்நாடு

"300 நூல்களுக்கு இணையானது செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம்': நீதிபதி மகாதேவன்

தினமணி

இளங்குமரனார் தொகுத்த செந்தமிழ்ச் சொற்பொருட்களஞ்சியம் தமிழர்களின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் 300 நூல்களுக்கு ஈடானது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் புகழாரம் சூட்டினார்.
 தமிழறிஞர் இரா.இளங்குமரனார் உருவாக்கிய செந்தமிழ்ச் சொற்பொருட்களஞ்சியம் 10 தொகுதிகள் வெளியீட்டு விழா சென்னை புத்தகக் காட்சி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் நூலை வெளியிட, "தினமணி 'ஆசிரியர் கி.வைத்தியநாதன் பெற்றுக் கொண்டார்.
 விழாவில் நீதிபதி மகாதேவன் பேசியது: செந்தமிழ்ச் சொற்பொருட்களஞ்சியம் என்ற இந்த நூலை வெளியிட்டதன் மூலம் தமிழுக்கான மிகச் சிறந்த பணியை ஆற்றியுள்ளார் இளங்குமரனார். பத்து தொகுதிகள் கொண்ட இந்த நூல் 3,254 பக்கங்களில் 8 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட அகராதியாக தொகுக்கப்பட்டுள்ளது. இதில் அகநானூறு, புறநானூறு, மலைபடுகடாம், குற்றாலக் குறவஞ்சி என சங்கத் தமிழ் இலக்கியங்கள் சார்ந்த 120-க்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து பல்வேறு விதமான உதாரணங்களைக் கொடுத்து ஒரு சொல் எப்படி உருவாகிறது என விவரித்துள்ளார்.
 "ஐ' என்ற ஒரு எழுத்தை எடுத்துக் கொண்டால் அந்த "ஐ" அன்றாட வாழ்வில் எந்தெந்த விதங்களில் எல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான விளக்கம் இருக்கும். "ஐ' என்பதிலிருந்து ஐயோ என்ற வார்த்தை வந்தால் அது எந்தவிதமான பொருளைத் தரும் என்பதை வெறும் விளக்கமாகத் தராமல் "ஐயோஇவன் வடிவுஎன்பதோர் அழியாஅழகு உடையான்' என ராமாயணத்தில் ராமனின் அழகைப் பற்றி கம்பர் வர்ணித்ததை இளங்குமரனார் சுட்டிக் காட்டியிருக்கிறார். பத்தாவது தொகுதியின் இறுதியில் இந்த மொழியையும், மொழிக்கான சொல் வளத்தையும் ஆற்றலையும் பேணிக் காத்தல் நமது கடனே என இளங்குமரனார் கூறியிருக்கிறார். இதை தமிழர்கள் உணர வேண்டும். நமக்கான கலாசாரம், பண்பாட்டை அணுகிப் பார்க்க உதவும் 300 நூல்களுக்கு இந்தப் பத்துத் தொகுதிகள் ஈடானவை என்றார்.
 அவ்வை நடராசன்: முன்னதாக தமிழறிஞர் அவ்வை நடராசன் தலைமை வகித்துப் பேசுகையில், தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம் 40 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் பெருஞ்சொற்களஞ்சியம் என்ற பெயரில் முப்பது ஆண்டுகளாக இந்தப் பணியை ஆற்றி வருகிறது. இந்த இரு பணிகளுக்கு இணையான பணியை தனி ஒருவராக இருந்து ஆற்றியுள்ளார் இளங்குமரனார்.
 "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்று தொல்காப்பியர் கூறியிருக்கிறார். ஆனால் 100-க்கு 60 சொற்களுக்கு வேண்டுமானால் வேர் காண முடியும்; விளக்கம் கூற முடியும். 40 சதவீதச் சொற்கள் இன்னும் வேர் காண முடியாத அளவுக்கு உள்ளன. அரிய சொற்களையெல்லாம் கண்டறிந்து ஆராய்வது என்பது மிகவும் கடினமான பணியாகும். அந்த வகையில் சொற்களின் பொருளைக் கண்டறிந்து நெல்லை, தொண்டை நாடு, கொங்கு மண்டலம் என பல வட்டாரங்களின் சொற்கோவைகளையெல்லாம் எடுத்துக் காட்டியிருக்கிறார் இளங்குமரனார். தமிழுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்களால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றார்.
 முதுமுனைவர் இளங்குமரனார் ஏற்புரையாற்றினார்.
 விழாவில் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ.இளவழகன், மதுரை மணியம்மை பள்ளித் தாளாளர் பி.வரதராசன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராஜேந்திரன், மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் ந.அருள், எழுத்தாளர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன், தமிழறிஞர் முத்துக்குமாரசுவாமி ,
 பேராசிரியர் திருமாறன், பி.தமிழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT