தமிழ்நாடு

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 15 பேரின் குடும்பங்களுக்கு நிதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

DIN

 பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 15 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 நாகப்பட்டினம் மாவட்டம் வாணகிரி கிராம கடல் பகுதியில் குளிக்கச் சென்ற தனியார் கல்லூரி மாணவிகள் விவேகா, மஞ்சு, சிவப்பிரியா ஆகிய மூன்று பேர் கடல் அலையில் மூழ்கி உயிரிழந்தனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா, கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ரிஷோர், சந்தியாகு ராயப்பன் ஆகியோர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
 கிருஷ்ணகிரி மாவட்டம் கெம்பட்டி கிராமத்தின் ராஜப்பா தேனீக்கள் கொட்டியதிலும், ஊத்தங்கரை கஞ்சனூர் கிராமத்தின் கணேசன், பனைமரத்தில் ஏறிய போது மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்தனர். திண்டுக்கல் கோடாங்கிபட்டியைச் சேர்ந்த சபீதா, கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததை அறிந்த சுமதி என்பவர் தனது இடுப்பில் வைத்திருந்த கைக்குழந்தையுடன் சபீதாவை காப்பாற்ற முயன்றார். அப்போது மூவரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
 கன்னியாகுமரி வெள்ளிச்சந்தையைச் சேர்ந்த அய்யாவு, தென்னை மரத்தில் ஏறும் போது கடந்தைகள் கொட்டியதில் உயிரிழந்தார். புதுக்கோட்டை முல்லையூர் கிராமத்தின் கீர்த்தனா குட்டையில் மூழ்கி உயிரிழந்தார். பொன்னமராவதி செவலூர் விளக்கு அருகில் அரசு பேருந்தும், இரு சக்கர வாகனமும் மோதியதில் பாலசுப்பிரமணியன், வினோத் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

SCROLL FOR NEXT