தமிழ்நாடு

ராமேசுவரம் மீனவர்கள் 3ஆவது நாளாக வேலைநிறுத்தம்: 46 விசைப்படகுகளை மீட்க அதிகாரிகள் குழு இலங்கை பயணம்

DIN


ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீனவர்கள் 3ஆவது நாளாக புதன்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரூ. 4 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 46 விசைப்படகுகளை மீட்க அதிகாரிகள் குழு புதன்கிழமை இலங்கை சென்றது.
ராமேவரத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மூன்று விசைப்படகுகள் மற்றும் 19 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இதனைக் கண்டித்தும் உடனே படகுகள் மற்றும் மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் மீட்க நடவடிக்கை எடுக்க கோரியும் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மீனவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மூன்றாவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தம் காரணமாக இறால் மீன், நண்டு, கனவாய் என ரூ. 4 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
மேலும் 8 ஆயிரம் மீனவர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
மீட்புக் குழு இலங்கை பயணம்: தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 180-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இதில் மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்ட நிலையில் படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் மறுத்துவிட்டது. 
இந்நிலையில், இலங்கையில் உள்ள காரைநகர், காங்கேசன் துறைமுகம், மன்னார் துறைமுகம் உள்ளிட்ட துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகள் 80 சதவீதம் சேதமடைந்து விட்டன என கடந்த முறை ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் மற்றும் மீனவ குழுவினர் தெரிவித்தனர். இந்நிலையில், பயன்படுத்த முடியும் என்ற நிலையில் உள்ள 46 விசைப்படகுகளை இலங்கை நீதிமன்றம் கடந்த ஒரு மாதத்துக்கு முன் நல்லெண்ண அடிப்படையில் விடுவித்தது. 
இந்த விசைப்படகுகளை மீட்டு வர புதன்கிழமை மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் வர்க்கிஸ், உதவி இயக்குநர்கள் கதிரேசன், ஜெயக்குமார், மீன்வளத்துறை ஆய்வாளர்கள் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட மீனவ சங்க மாவட்டச் செயலர் ஜேசுராஜா, மெக்கானிக் ஆல்வீன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட விசைப்படகு மீட்பு குழுவினர் மதுரையில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு புதன்கிழமை சென்றடைந்தனர்.
இந்நிலையில், 9 விசைப்படகுகளில் படகு ஒன்றுக்கு 7 பேர் வீதம் 63 பேர் புதன்கிழமை ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் இலங்கையில் இருந்து உரிய தகவல் வராததால் ரத்து செய்யப்பட்டு வியாழக்கிழமை அவர்கள் இலங்கை செல்ல உள்ளதாக கடலோர காவல்படை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT