தமிழ்நாடு

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தில்லி முதல் சென்னை வரை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி

DIN

வரும் மக்களவைத் தேர்தலுக்கான  தமிழக பாஜகவின் பணிகளைத் தொடக்கி வைப்பதற்கு அச்சாரமாக மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடம் அருகே உள்ள மைதானத்தில், தமிழக பாஜக சார்பிலான பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்,  மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள்,  தென்மாவட்டங்களின் 10 மக்களவைத் தொகுதிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் அஞ்சலி செலுத்துகிறேன் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: 

ஏழைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஏழை, எளிய மக்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஏழை மக்களுக்கான திட்டத்தை எதிர்ப்பது நன்மை பயக்காது.

நாட்டின் வளர்ச்சிக்காக உள்கட்டமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கப்பல் போக்குவரத்தில் முக்கிய துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்தப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை, நீர்வழிச்சாலை, வானூர்தி சேவை, தகவல் தொடர்பு மேம்பாட்டுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

வானூர்தி மற்றும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியின் மையமாக தமிழகம் திகழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மதுரை உட்பட 10 இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தனுஷ்கோடியை ராமேஸ்வரம், பாம்பனுடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் சில தமிழக கட்சிகள் எதிர்மறையாக பேசி வருகின்றன, தவறாக சித்தரிக்க முயல்கின்றன. பொதுப்பிரிவில் 10 சதவீத இடஒதுக்கீட்டால் பட்டியல் இனத்தவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரின் கோரிக்கை தொடர்பாக அதற்கான ஆணையத்தில் பேசியுள்ளேன்.

தமிழகத்தில் சில கட்சிகள் தங்கள் சுயநலத்துக்காக மக்களை தவறாக வழி நடத்துகின்றனர். நாட்டை சுரண்டுபவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் உள்நாட்டில் இருந்தாலும் வெளிநாட்டில் இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, தில்லி முதல் சென்னை வரை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரோக்கியத்தை மேம்படுத்த தூய்மை இந்தியா திட்டம் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நாடு முழுவதும் 9 கோடி கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழகத்தில் மட்டுமே 47 லட்சம் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன என்றார். 

முன்னதாக, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கினார். தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒவ்வொரு மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். மதுரை, தஞ்சை, நெல்லையில் பன்னோக்கு சிறப்பு மருத்துவப் பிரிவை தொடங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம் தொடங்கிய ஒரு மாதத்தில் ரூ.200 கோடி மதிப்பில் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தில் தமிழகத்தில் 1.5 கோடி பேர் பயனடைந்துள்ளனர். ஒரு மாதத்தில் மேலும் சுமார் 89,000 பேர் சிகிச்சை பெற விண்ணப்பித்துள்ளனர்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் மத்திய அரசின் இந்த மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் 30 சதவீத மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT