தமிழ்நாடு

சிலைக் கடத்தல் வழக்கு: பிப். 19-க்கு ஒத்திவைப்பு

DIN

சிலைக் கடத்தல் வழக்கில் சிறப்பு அதிகாரியாக ஐஜி பொன் மாணிக்கவேல் நியமனம் தொடர்பான வழக்கை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மனுக்களுக்கு எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 13-இல் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களில் பதில் அளிக்க யானை ராஜேந்திரன், டிராஃபிக் ராமசாமி உள்ளிட்ட எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அசோக் பூஷண், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் ஆஜராகி, "சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஜி பொன் மாணிக்கவேல் ஏற்கெனவே பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். எனவே, அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "சிலை கடத்தல் தொடர்புடைய வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டிய தேவை என்ன? சிபிஐயிடம் ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளனவே?'என வினவினர்.
இதற்கு மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், "சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏற்கெனவே முடங்கியுள்ளது. சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டத்துக்கு முரணாக உள்ளது. தற்போது வரை பொன் மாணிக்கவேல் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தமிழக அரசுக்குத் தெரியாது. சிலைக் கடத்தல் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க 15 முதல் 20 ஆண்டுகள் ஆகும்' என்றார்.
இதைத் தொடர்ந்து, யானை ராஜேந்திரன் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா, "சிலைக் கடத்தல் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க மாநில அரசுக்கு ஆர்வம் இல்லை. வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லாததுபோல காட்டப்படுகிறது' என்றார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், தமிழக அரசின் மனுக்களுக்கு டிராஃபிக் ராமசாமி, யானை ராஜேந்திரன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

SCROLL FOR NEXT