தமிழ்நாடு

போராடுபவர்களை ஒடுக்குவதில் இருக்கும் அக்கறை சுமுகத்தீர்வு காண்பதில் அரசுக்கு இல்லை: இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை 

DIN

சென்னை: போராடும் அரசு ஊழியர்கள் மற்றும்  ஆசிரியர்களை ஒடுக்குவதில் இருக்கும் அக்கறை சுமுகத்தீர்வு காண்பதில் அரசுக்கு இல்லை என்று இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக இடதுசாரி கட்சிகள் மற்றும் அமைப்புகள் புதனன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஈடுபடும் வேலைநிறுத்தப் போராட்டம் இன்றோடு 9-வது நாளை எட்டுகிறது. அடக்குமுறைக்கு அஞ்சாமல் உறுதியான  போராட்ட உணர்வுடன் களத்தில் நிற்கும் ஊழியர்களை மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம். நள்ளிரவு கைது, மின்சாரத்தை நிறுத்தி இருளில் அடைப்பு உள்ளிட்ட பல ஒடுக்குமுறை நடவடிக்கைகளை தீரத்துடன் எதிர்த்து நின்றவர்களை குறிப்பாக பெண் ஊழியர்களை பாராட்டுகிறோம்.  நேற்றைய தினத்திலிருந்து நீதிதுறை ஊழியர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். தலைமைச்செயலக ஊழியர் சங்கமும், அரசு அலுவலர் ஒன்றியமும் ஆதரவு தெரிவித்து  அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், இதர ஜனநாயக அமைப்புகளும் ஆதரவு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்பது  போராட்டத்தின் முக்கிய கோரிக்கை. அதிமுகவின் 2016 தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நடக்கும் இப்போராட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்குக் கூட அரசு தயாராக இல்லை என்பது அரசின் ஆணவத்தையும், பிடிவாதப்போக்கையும் காட்டுகிறது. நீதிமன்றம் கொடுத்த ஆலோசனைகளையும் ஏற்கவில்லை. போhராடும் ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று நீதிமன்றத்திலும், பொது வெளியிலும் அறிவித்த பிறகும் அதைக் கணக்கில் எடுக்காமல், போராட்டத்தை கைவிட வேண்டுமென்கிற வேண்டுகோளை மட்டும் முதலமைச்சர் ஊடகங்கள் மூலமாக வெளியிட்டுக் கொண்டிருப்பது நியாயமற்றது. போராடுபவர்களை ஒடுக்குவதில் இருக்கும் அக்கறை சுமுகத்தீர்வு காண்பதில் அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்நிலையில், பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் +2 மாணவர்களுக்கு பிராக்டிகல் தேர்வு தொடங்க உள்ளது. ஆசிரியர்கள் பணியில் இல்லை என்பது அவர்களுக்கு ஒரு பதட்டத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பையும், நலனையும் கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை ஒத்தி வைப்பதை பரிசீலிக்க வேண்டுமென்று ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT