தமிழ்நாடு

காவிரியில் 4 இடங்களில் தடுப்பணைகள்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

DIN


காவிரி ஆற்றில் 4 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படும். அவற்றில் கரூர் அருகே 1.5 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்கும் அளவிலான தடுப்பணை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமி  தெரிவித்தார். 
ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட  அதிமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
கேரளம்,  கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால்,  மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம்   90 அடியை எட்டியவுடன் சம்பா சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்படும்.
கரூர் அருகே தடுப்பணை: காவிரி ஆற்றில் கரூர் அருகே 1.5 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கும் அளவில் தடுப்பணை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்.  மேலும்,  3 இடங்களில் தடுப்பணை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.இதன் மூலம் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆற்றின் இருபுறமும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உருவாகும்.
உபரிநீர் சேகரிப்பால் டெல்டா மாவட்டம் பாதிக்காது: தமிழகத்தில் ஒரு சொட்டு தண்ணீர்கூட வீணாகக் கூடாது என்ற அடிப்படையிலேயே அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டம்  நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 
காவிரி - கோதாவரி இணைப்புக்குப் பின்னர்,  அதிலிருந்து வரக் கூடிய உபரி நீரையும் சேலம் மாவட்டத்தில் வறட்சிப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். 
மழைக்காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை மட்டுமே சேலம் மாவட்ட ஏரிகளில் நிரப்ப திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கும் என்பதெல்லாம் வீண் வதந்தி.
விவசாயிகள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்:  சென்னை- சேலம்  பசுமை வழிச் சாலை வர வேண்டும் என 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.  சிலர் மட்டுமே எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். இது மத்திய அரசின் திட்டமாகும். முக்கிய திட்டமான விரைவுச் சாலையை விவசாயிகள் பாதிக்கப்படாமல் அமைத்திட வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்கிறோம். இந்தத் திட்டத்துக்காக யாரையும் அச்சுறுத்தியோ, வற்புறுத்தியோ நிலம் பெறும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. 
நானும் விவசாயிதான். விவசாயிகளுக்கு எதிரானவர்கள் இல்லை. அதேநேரத்தில்  போக்குவரத்து நெருக்கடியையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். 
பொது மக்களின் நலனையும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு வசதியாக விவசாயிகள் நல்ல முடிவை எடுக்க வேண்டும். 
பயங்கரவாத அமைப்புகள் கட்டுப்படுத்தப்படும்: பயங்கரவாத அமைப்புகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசுடன் தமிழக அரசு துணை நிற்கும். இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் குறித்து முன்கூட்டியே தமிழக உளவுப் பிரிவு மத்திய அரசுக்கு தகவல் அளித்தது.
பலம் பொருந்திய கட்சியாக அதிமுக:  உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள்.  அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன் பொய் பேசி வருகிறார்.  முன்னர்,  அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகக் கூறினார். இப்போது என்ன ஆனது?  அமமுகவில் இருந்து விலகி பல்வேறு தொண்டர்கள் தாய்க் கழகமான அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். 
அவரிடம் இருந்த 3 எம்எல்ஏக்களும் தற்போது அதிமுகவுக்கு வந்துவிட்டார்கள். அதிமுக பலம் பொருந்திய கட்சியாக உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT