தமிழ்நாடு

தருதல், கொடுத்தல், ஈதல் ஆகியவற்றுக்கு நுட்பமான பொருள் உண்டு: இலங்கை ஜெயராஜ் விளக்கம்

DIN


 தருதல், கொடுத்தல், ஈதல் ஆகியவை ஒரே பொருளைப் போலத் தெரிந்தாலும் ஒவ்வொன்றுக்கும் நுட்பமான பொருள் உள்ளது என விளக்கம் அளித்தார் இலங்கை ஜெயராஜ்.  
      புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற 44ஆவது கம்பன் பெருவிழாவின் 4 ஆம் நாள் நிகழ்ச்சியில் உள்ளத்தனைய உயர்வு என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது: 
உள்ளத்தனைய உயர்வு என்ற சொல்லாடல் திருவள்ளுவருடையது. கம்பரில், கம்பராமாயணத்தில் இது எவ்வாறு பொருந்துகிறது என்பதுதான் தலைப்பு. 
குளத்தில் தாமரைச் செடி தண்ணீரின் அளவுக்கேற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் வளர்கிறதோ அதுதான் உள்ளத்தனைய உயர்வு என்ற சொற்றொடரின் பொருள். இதில் உள்ளங்கை நெல்லிக்கனி என்ற சொற்றொடரையும் பொருத்திப் பார்க்கலாம். அதாவது நெல்லிக்கனியை ஏன் இதற்கு எடுத்துக்காட்டாக சொன்னார்கள் என்றால், நெல்லிக்கனியில் மேலே உள்ள கோடு, உள்ளேயும் அதேபோலத்தான் இருக்கும். அதுதான் உள்ளத்தனைய உயர்வுக்கான எடுத்துக்காட்டு.
தருதல், கொடுத்தல், ஈதல்  ஆகியவை ஒரே பொருளைத் தருவன என்று எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு நுட்பமான பொருள்கள் உள்ளன. அதாவது, உயர்வான பொருளைத் தருவது தருதல், ஈடான பொருளைத் தருவது கொடுத்தல், தாழ்வான ஒன்றையும் கொடுத்தல் ஈதல் என்று உணரலாம்.
எந்த வகையில் ராமனை விடவும் பரதன் உயர்ந்தவனாகிறான் என்பதுதான் கேள்வி. வீரதீரச் செயல்களை ராமன் புரிந்திருந்தாலும் உள்ளத்தால் பரதன் உயர்ந்தவராக இருக்கிறான் என்பதுதான் பதில் என்றார்  இலங்கை ஜெயராஜ்.
நிகழ்ச்சிக்கு, மீனாட்சி மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் க. பெரியசாமி தலைமை வகித்தார். வைரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சி. ரகுபதி சுப்பிரமணியன் கருத்துரை நிகழ்த்தினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலர் எஸ்.டி. பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் அ. மணவாளன் உள்ளிட்டோரும் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக கம்பன் கழகத் துணைச் செயலர் எம். கருப்பையா வரவேற்றார். முடிவில், புதுகைப் புதல்வன் நன்றி கூறினார். 
நிகழ்ச்சியின் தொடக்கமாக திருச்சி பிரீத்தி நந்தகுமாரின் கம்பனிசை நடைபெற்றது.

கம்பன் கழகங்களால் புதிய இலக்கிய அமைப்புகள் உருவாகின்றன
விழாவில், தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேசியது: கம்பன் கழகம் போன்ற அமைப்புகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் இலக்கியப் பணிகள்தான் இன்னமும் இலக்கியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன; கூடவே புதிய இலக்கிய அமைப்புகளையும் உருவாக்குகின்றன. அதனால்தான் தினமணியில் இவற்றுக்கான முக்கியத்துவத்தை அளிக்கிறோம். பணிச்சுமைக்கு மத்தியிலும் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். கம்பனை ஊரெல்லாம் எடுத்துச் சென்றது ஜீவா போன்ற இடதுசாரிகள்தான். கல்வியில் சிறந்த கம்பன் என்ற சொற்றொடர் கம்பராமாயணத்தில் உள்ள கவிதை நயத்தையும், பொருள் நயத்தையும் ஒட்டியே ஏற்பட்டது என்றார் வைத்தியநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT