தமிழ்நாடு

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் சாரல் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 31 அடியாக உயர்வு

DIN


தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து,  நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 31 அடியாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்குவது வழக்கம். நிகழாண்டு சில நாள்கள் தாமதமாக ஜூன் 8-இல் தொடங்கியது. பருவமழை தாமதமாகத் தொடங்கினாலும் பரவலாக மழைப் பொழிவு உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் மழைப் பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த  24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 64 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்து 31 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 2414.93 கன அடியாகவும், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 25 கன அடியாகவும் உள்ளது.
156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 52.89 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 58.30 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 530 கன அடியாகவும், அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 275 கன அடியாகவும் உள்ளது. கோடை மழை இல்லாமல் அணைகள் வறண்டுபோன நிலையில், தென்மேற்குப் பருவமழை தொடக்கத்திலேயே பரவலாக பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான சாகுபடிக்கு ஜூன் முதல் வாரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால், இவ்வாண்டு இதுவரை தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. 
தற்போது பெய்துவரும் தென்மேற்குப் பருவமழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மணிமுத்தாறு அணைக்கு மேல் வனப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மணிமுத்தாறு - மாஞ்சோலை மலைச் சாலை சீரமைப்புப் பணி நடைபெற்று வருவதால் மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

பெருந்துறை விவேகானந்த பள்ளி மாணவா்கள் 100 % தோ்ச்சி

வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT