தமிழ்நாடு

தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல்: தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் விசாரணை

DIN

மதுரை மாவட்டம், வலையபட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் குறித்து தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய துணைத் தலைவர் முருகன் சனிக்கிழமை விசாரணை நடத்தினார்.

வலையபட்டியில் கடந்த ஜூன் 8-ஆம் தேதி தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்தும், தாழ்த்தப்பட்ட அங்கன்வாடிப் பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்தும் விசாரணை நடத்துவதற்காக, தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய துணைத் தலைவர் எல். முருகன் அந்த கிராமத்துக்கு நேரில் சென்றார். அங்குள்ள  மக்களிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்த அவர், சேதமடைந்த வீடுகளைப் பார்வையிட்டு, காயமடைந்த மக்களையும் சந்தித்து விசாரணை நடத்தினார். பின்னர், கலவரத்தில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மின்வாரிய ஊழியர் ஆறுமுகத்தையும் சந்தித்து விசாரணை நடத்தினார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: எஸ்.வலையபட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் 70 குடும்பங்களும், 500-க்கும் மேற்பட்ட பிற சமுதாயத்தினர் குடும்பங்களும் உள்ளன. இந்நிலையில், இங்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிரானக் கொடுமைகள் தொடர்ச்சியாக நடைபெறுவதும், அவ்வப்போது மாவட்ட நிர்வாகம் சமாதானக் கூட்டம் நடத்துவதும் வழக்கமாக இருந்து வருகிறது.    தற்போது, அம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு, விளையாட்டுப் போட்டிகளில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இதில், தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. மின் மீட்டர்கள் உடைக்கப்பட்டு மின்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  கடந்த ஜூன் 4-ஆம் தேதி வலையபட்டி கிராமத்தில் பணியாற்றி வந்த தாழ்த்தப்பட்ட அங்கன்வாடிப் பெண் ஊழியர்கள் அருகிலுள்ள கிராமங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்த தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது. 

தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் விசாரிப்பதை அறிந்தவுடன், வேறு இடங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட அங்கன்வாடிப் பெண் ஊழியர்களை, அவசர அவசரமாக மீண்டும் வலையப்பட்டி கிராமத்தில் பணியில் அமர்த்தி உள்ளனர். இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது.     இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்திடம் உரிய விசாரணை நடத்தப்படும். இச்சம்பவங்கள் காரணமாக வெளியூர் சென்றுள்ள பள்ளிக் குழந்தைகள், பிற சமுதாயக் குழந்தைகள் அனைவரையும் ஜூன் 17-ஆம் தேதிக்குள் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை உடனடியாக வழங்கவேண்டும். காயமடைந்தவர்களுக்கும், சேதமடைந்த வீடுகளுக்கும் ஜூன் 17-ஆம் தேதிக்குள் இழப்பீடு வழங்கவேண்டும் என, மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.    இதுபோன்று சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளில் அனைத்து சமுதாயத்தினரையும் அழைத்து, சமூக நல்லிணக்க விழிப்புணர்வுக் கூட்டங்களை, மாவட்ட நிர்வாகம் அடிக்கடி நடத்தவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT