தமிழ்நாடு

நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு கோரி விஷால் தொடர்ந்த வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

DIN

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கின் விசாரணையை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவில், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்தத் தேர்தல், அடையாற்றில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கல்லூரிக்கு அருகில் தமிழக அமைச்சர்கள், நீதிபதிகள் ஆகியோரின் குடியிருப்புகள் உள்ளன. தேர்தலின் போது மோதல் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. 
எனவே எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடத்துவது உகந்தது அல்ல என பட்டினப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அறிக்கை ஒன்றை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து காவல்துறையின் அனுமதியை பெற்று வருமாறு கல்லூரி நிர்வாகம் நடிகர் சங்கத்திடம் தெரிவித்துள்ளது. எனவே இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தலை மாற்று இடத்தில் நடத்துவது குறித்து கேள்வி எழுப்பி, பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில் வழக்கு நீதிபதி
 என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சங்கத்தின் பதிவாளர் சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.ஹெச்.அரவிந்த்பாண்டியன், நடிகர் சங்கத் தேர்தலை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர்கள் பட்டியலில் சங்க உறுப்பினர்கள் பலரது பெயர்கள் விடுபட்டுள்ளன. 
இதுதொடர்பாக இரு தரப்புகளில் இருந்தும் புகார் செய்துள்ளனர். இந்தப் புகார்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளதால், நடிகர் சங்க தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். 
அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், தேர்தல் வாக்குப்பதிவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோர முடியாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இதற்கு மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் கிருஷ்ணா எதிர்ப்பு தெரிவித்தார்.  இதனையடுத்து, வழக்கின் விசாரணையை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT