தமிழ்நாடு

உயர் மின்அழுத்த வழித்தட திட்டம்: மக்களிடம் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன: உயர்நீதிமன்றம் கண்டனம்

DIN


சத்தீஸ்கர் மாநிலம் முதல் தமிழகம் வரை அமைக்கப்பட்டு வரும் உயர் மின் அழுத்த வழித்தட திட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 
இந்தத் திட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள், உண்மையிலேயே மக்கள் பிரச்னைகளுக்குத் தான் குரல் கொடுக்கிறார்களா என்பதை சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ரெய்காரில் இருந்து கரூர் மாவட்டம் புகழூர் வரை 1,853 கி.மீ. தூரத்துக்கு 800 கிலோவாட் உயர் மின் வழித்தடத்தைக் கொண்டு வர இந்திய மின் தொடரமைப்புக் கழகம் முடிவு செய்து, அதற்கான பணிகளைத் தொடங்கி உள்ளது. இதனை எதிர்த்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், தருமபுரி,திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என  பழனிசாமி என்பவர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில், இதுபோன்ற திட்டங்கள் தமிழக மக்களுக்கு தடையற்ற மின்சாரம் கிடைக்க செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டத்துக்கான பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து விட்டது. உண்மையிலேயே மின் கதிர்களால் பாதிப்பு இருக்கும் என்பவர்கள், மின்கோபுரத்தின் உயரத்தை அதிகரிக்கக் கோரி மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கலாம். தமிழகத்தில் 345 கி.மீ. தூரத்துக்கு மட்டுமே இந்த வழித்தடம் அமைய உள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. தமிழகம் இருளில் தவிக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ஒரு திட்டத்தைக் கொண்டு வரும்போது, வழக்குக்கு மேல் வழக்குத் தொடர்வது கண்டனத்துக்குரியது. மேலும், இந்தத் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுக்கு எதிராக ஒரு உத்தரவை பிறப்பிக்கும் வரை இந்த நீதிமன்றத்துக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தங்களது வீடுகள், தொழில் நிறுவனங்களில் தடையற்ற மின் வசதியை அனுபவித்து விட்டு பொதுமக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பி போராட்டத்துக்கு தூண்டுபவர்கள் உண்மையிலேயே மக்கள் பிரச்னைகளுக்காகத்தான் குரல் கொடுக்கிறோமோ என்பதை சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, இந்த திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

SCROLL FOR NEXT