தமிழ்நாடு

கோகுல்ராஜ் கொலை வழக்கு மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம்

DIN


நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்த கோகுல்ராஜ் கொலை வழக்கை மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், 4 மாதங்களில விசாரணையை முடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், கோகுல்ராஜின் தாய் சித்ரா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணைக்கு முன்னதாக இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையில், இன்று விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில், கோகுல்ராஜின் தாய் சித்ரா தாக்கல் செய்த மனுவில், சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த எனது மகன் கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே ஆணவக் கொலைச் செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.  

நாமக்கல் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சேலம் அல்லது வேறு மாவட்டத்துக்கு, வழக்கு விசாரணையை மாற்ற வேண்டும் எனக் கோரியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள யுவராஜின் ஆதரவாளர்களிடமிருந்து, தங்களுக்கு மிரட்டல் வருகிறது. அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். எனவே, நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றால், தங்களுக்கு நியாயம் கிடைக்காது எனவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய கண்காணிப்புக் கேமரா காட்சிப்பதிவுகள், நாமக்கல் நீதிமன்றத்தில் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும், கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணைக்கு, இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். 

மேலும், இம்மனு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர் ஆகியோர், 2 வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று விசாரணையை மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT