தமிழ்நாடு

கமல்ஹாசனுக்கு எதிரான மனு: தில்லி உயர்நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு 

DIN


நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு எதிரான பொதுநல வழக்கை விசாரிக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 
முன்னதாக, கமலுக்கு எதிராக தில்லி பாஜக செய்தித் தொடர்பாளரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய், தில்லி உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 
அதில், தமிழகத்தின் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சே தான் சுதந்திர இந்தியாவின் முதல் ஹிந்து பயங்கரவாதி எனக் குறிப்பிட்டுள்ளார். 
தேர்தல் லாபத்துக்காக சிறுபான்மையினர் இருந்த பகுதியில் இதுபோன்று மத ரீதியிலான பிரசாரத்தை கமல்ஹாசன் செய்துள்ளார். இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தவறான  செயல்பாடாகும். மேலும், இரு மதத்தினரிடையே பிரிவினையை உருவாக்க கமல்ஹாசன் திட்டமிட்டு முயற்சி செய்கிறார். 
நாட்டில் சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. எனவே, தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமலிருக்க கமல்ஹாசனுக்கு 5 நாள்கள் தடை விதிக்க வேண்டும். இந்திய குற்றவியல் சட்டப்படி உரிய பிரிவுகளில் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. 
இந்த மனு நீதிபதிகள் எஸ். சிஸ்தானி, ஜோதி சிங் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை தமிழகத்தில் ஏன் தாக்கல் செய்யவில்லை என நீதிபதிகள் வினவினர். இதற்கு மனுதாரர்அஸ்வினி குமார் உபாத்யாய், தேர்தல் ஆணையம் தொடர்புடையது என்பதால், தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கமல்ஹாசனின் பேச்சு தேர்தல் நடத்தை நெறிமுறைகளுக்கு எதிரானது. எனவே, தேர்தல் ஆணையத்துக்கு தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றார். 
தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பி.ஆர். சோப்ரா, கமல்ஹாசன் தமிழகத்தில்தான் பேசியுள்ளார். அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரும் நிலுவையில் உள்ளது என்றார். 
இரு தரப்பு வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனுவை விசாரிக்க முகாந்திரம் இல்லை. எனவே, வழக்கை விசாரிக்க  முடியாது. இது தொடர்பாக உரிய அமைப்பை மனுதாரர் அணுகலாம் என தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

SCROLL FOR NEXT