தமிழ்நாடு

குழந்தை சுஜித்தை வைத்து லாபம் பார்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்கள்! கோபத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Muthumari

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில், பிரிட்டோ ஆரோக்கியராஜ் - கலா மேரியின் 2 வயது குழந்தை சுஜித் வில்சன் கடந்த அக்.25ம் தேதி மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. தமிழகமே அந்த நாட்கள் ஒருவித பயத்திலும், பதற்றத்திலும், சோகத்திலும் இருந்தது.

அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், மீட்புப்பணியினர், பொது மக்கள் என பலர் தூக்கத்தை தொலைத்து குழந்தையை மீட்கப் போராடினர். மீட்புப் பணி கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து வந்த நிலையில், 80 மணிநேர போராட்டடத்திற்குப் பிறகு குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. செய்தி கேட்டு தமிழகமே சோகத்தில் மூழ்கியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.  

குழந்தை உயிரிழப்பு குறித்து  தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விளக்கம் அளித்தனர். குழந்தையின் உயிரிழப்புக்கு யார் காரணம் என்பதும் சமூக வலைத்தளங்களில் விவாதம் தொடர்ந்து வருகிறது.

குழந்தை இறப்பு குறித்த இரங்கல் செய்திகள் ஒருபக்கம் குவிய, மற்றொரு பக்கம் அரசியல் தலைவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். குழந்தையின் தாய்க்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்.

ஆழ்துளைக் கிணறை ஐந்து ஆண்டுகளாக மூடாமல் வைத்திருந்த பெற்றோர்களின் அலட்சியம் தான் குழந்தையின் இறப்புக்கு முதல் காரணம் என்று தெளிவாகத் தெரிகிறது. இருந்தபோதிலும், குழந்தை சுஜித்துக்கான நிதியுதவி 50 லட்சத்தை எட்டியுள்ளது. எதிர்பாரா உயிரிழப்பு ஏற்பட்டால்  அரசு நிதியுதவி வழங்கும் என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிடுவதற்கு முன்பு இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். 

இதற்கிடையே, சமூக வலைத்தளங்களில் பெரும்பாலான இடங்களை இப்போது மீம்ஸ்கள் தான் ஆக்கிரமித்துள்ளன. அரசியல் தலைவர்கள் ஆகட்டும், எவ்வளவு பெரிய பிரபலங்கள் ஆகட்டும், அவர்கள் பேசிய சில நிமிடங்களில் அவர்களது கருத்துகளை வைத்து மீம்ஸ்கள் பறக்கும். இவற்றில் பல ரசிக்கும்படியாக இருந்தாலும் சில மீம்ஸ்கள் இரட்டை அர்த்த வசனங்களாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வருவதும் தொடர்கிறது. 

இந்நிலையில், குழந்தை சுஜித்தை வைத்தும் சகித்துக்கொள்ள முடியாத சில மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் தற்போது காண முடிகிறது. குழந்தை சுஜித் மரணத்திற்கு இழப்பீடாக அரசு சார்பிலும், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும் லட்சக்கணக்கில் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. இதை மையாக வைத்து சில மீம்ஸ்கள் பரபரப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் மிகவும் கண்டிக்கத்தக்கது என சிலர் பதில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

மீம்ஸ்கள் ரசிக்கும்படியாக இருக்க வேண்டுமே தவிர, தவறான ஒரு கருத்தை மையப்படுத்துவதாக இருக்கக்கூடாது என்பதை மீம்ஸ் கிரியேட்டர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். தமிழகமே சோகத்தில் ஆழ்ந்த ஒரு நிகழ்வை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் லாபம் பார்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? மாறாக, இனிமேலாவது இதுபோன்ற ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மீம்ஸ்கள் மூலமாக மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெடுங்குடி கைலாசநாதா் கோயில் தேரோட்டம்

இணையம் மூலம் மருந்து விற்பனையை தடுக்க வலியுறுத்தல்

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கடும் உயா்வு: பீன்ஸ் ரூ.250, பட்டாணி ரூ.220

கொள்கை அடிப்படையில் ‘இந்தியா’ கூட்டணியில் தொடா்கிறோம்: மெஹபூபா முஃப்தி

தேசிய கராத்தே தோ்வு போட்டி: சுந்தரக்கோட்டை மகளிா் கல்லூரி சிறப்பிடம்

SCROLL FOR NEXT