தமிழ்நாடு

அன்றைக்கு பேனர்.. இன்றைக்கு கொடிக் கம்பம்.. அடுத்தது? எப்போது மறையும் விளம்பர மோகம்?

Muthumari

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவில் வைத்திருந்த பேனர் ஒன்று காற்றில் பறந்து விழுந்ததால் இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி விழுந்து, எதிரே வந்த லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த மாத தொடக்கத்தில் நடந்த சம்பவம் இது. 23 வயதே ஆன சுபஸ்ரீ தான் வீட்டில் இருந்து அலுவலகத்திற்குச் செல்லும் போது, ஒரு பேனரினால் நமது உயிர் போகும் என்று நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார். அவர்களது பெற்றோர்களும் வழக்கம்போல மகளை வழியனுப்பி வைத்திருப்பார்கள். ஆனால், விளம்பரத்திற்காக வைத்த பேனர் ஒரு உயிரை பறித்துள்ளது. ஆளும் கட்சியின் பேனர் என்பதால், பேனர் வைத்தவரை கைது செய்யாமல் பேனர் அச்சடித்தவரை கைது செய்த சம்பவம் எல்லாம் அரங்கேறியது. 

சரி, வழக்கம் போல உயிரிழப்புக்கு பின்னரே, சுதாரித்துக்கொண்டு மக்கள் சார்ந்த பிரச்னைகளில் நடவடிக்கை எடுப்பது போலவே, அரசு பேனர் விவகாரத்திலும் நடவடிக்கை எடுத்தது. இனிமேல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது மாதிரியான பேனர்கள் வைக்கப்படமாட்டாது என்று அதிமுக அறிக்கை வெளியிட்டது. இதேபோன்று திமுக உள்ளிட்ட ஒரு சில கட்சிகளும், திரையுலக பிரபலங்கள் சிலரும் அறிவிப்பு வெளியிட்டனர். 

கட்சிக் கூட்டங்கள், விழாக்களில் நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே பேனர் வைக்க வேண்டும்; அதனை மீறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோன்று தான் சுபஸ்ரீ  உயிரிழந்த சமயத்திலும் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. இதன்பின்னராவது பேனர் கலாச்சாரம் முழுவதுமாக ஒழியாவிட்டாலும், குறையும் என்று நினைத்தால் மீண்டும் இதே போன்ற ஒரு சம்பவம்... 

தமிழக முதல்வா் வருகையை ஒட்டி அவிநாசி சாலையில் பீளமேடு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளில் கட்சிக் கொடிக் கம்பங்கள் நடப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் அந்த வழியாக இளம் பெண் ஒருவர், இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சாலையின் நடுவே கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பம் சாலையில் விழுந்துள்ளது. இதைக் கண்ட அவர், வாகனத்தை திடீரென நிறுத்த முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவரது பின்னால் வந்த லாரி மோதியதில் அவரது இரு கால்களும் நசுங்கின. லாரியும் கட்டுப்பாட்டை இழந்து மற்றோா் இருசக்கர வாகனத்தில் மோதியதில் நித்யானந்தம் என்ற இளைஞா் காயமடைந்தாா்.

சாலையில் மயக்கமடைந்த பெண்ணை மீட்ட பொதுமக்கள் அருகில் இருந்த தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இளைஞர் நித்யானந்தம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். காயமடைந்த பெண்ணுக்கு இரு கால்களிலும் நரம்புகள் சேதமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடா்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு(கிழக்கு) போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்துள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் சிக்கிய பெண், சிங்காநல்லூர் பகுதியைச் சோ்ந்த ராஜேஸ்வரி என்கிற அனுராதா (30) என்பதும் அவர் கோவையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பணியாற்றி வருகிறாா் என்பது தெரியவந்துள்ளது. 

சாலையில் விழுந்த கட்சிக் கொடிக் கம்பத்தால்தான், ராஜேஸ்வரி கீழே விழுந்து பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர்கள், உறவினர்கள்  போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆனால், வழக்கை விசாரித்து வரும் போலீசார், கட்சிக் கொடிக் கம்பத்தினால் விபத்தை ஏற்படவில்லை என்றும், லாரி ஓட்டுநரின் அலட்சியத்தால் மட்டுமே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய காலகட்டத்தில் எல்லாமே விளம்பரமயமான ஒரு சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் உபயோகிக்கும் சிறு பொருட்கள் முதல் தேர்தல் மூலமாக தலைமையைத் தேர்ந்தெடுப்பது வரை அனைத்திலும் விளம்பரம்தான். யார் வெற்றி பெற வேண்டும்? யார் தோல்வியடைய வேண்டும்? என்பதை விளம்பரங்களே தீர்மானிக்கின்றன. 

மக்களைப் பாதுகாக்கும் அரசுகளே இதுபோன்று அலட்சியமாக செயல்படுகிறது. பொது இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் பேனர்களைத் தவிர்க்க வேண்டும் என்று மக்கள் எவ்வளவு போராட்டங்கள் நடத்தினாலும், நீதித்துறை எத்தனை உத்தரவுகளைப் பிறப்பித்தாலும் இவர்கள் எப்போது திருந்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை? விதிகளை மீறி பேனர் வைப்பது சட்டப்படி குற்றம் என்று கூறிய நீதித்துறையின் உத்தரவை அரசும், முதல்வரும் மதிக்கவில்லை என்றால் அரசின் கீழ் உள்ள மக்கள் எப்படி பின்பற்றுவார்கள்? 

இது ஒருபுறம் இருக்கட்டும்.. நமக்கு நமது குடும்பத்தினர், நண்பர்கள் மீது அக்கறை உள்ளதென்றால் நாமும் மாற்றத்தின் தொடக்கப்புள்ளியாக இருக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளினால் பாதிக்கப்படுவது என்னவோ மக்களாகிய நாம்தான். எனவே, விளம்பர மோகங்களுக்கு அடிமையாவதை, நாம் முதலில் புறக்கணிப்போம். நமது வீட்டில் நடைபெறும் விழாக்களில் நம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளில் பேனர்கள், விளம்பரங்களைத் தவிர்ப்பதன் மூலமாக நாம் அரசுக்கு எடுத்துக்காட்டாக இருப்போம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT