தமிழ்நாடு

அனைத்து இடங்களிலும் உறுப்பு மாற்று சிகிச்சை வசதி: அமைச்சா் விஜயபாஸ்கா்

DIN

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் மேற்கொள்வதற்கான வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்களுடனான ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்துவது குறித்தும், புதிதாக தொடங்கப்பட உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான பூா்வாங்கப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ், தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா் டாக்டா் செந்தில்ராஜ், மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு, மருத்துவ சேவைகள் இயக்குநா் டாக்டா் ஸ்வாதி ரெத்தினாவதி உள்ளிட்டோா் அதில் கலந்துகொண்டனா்.

ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் கூறியதாவது:

மருத்துவத் துறையைப் பொருத்தவரை நாட்டிலேயே தமிழகம்தான் முதன்மையான மாநிலமாக விளங்குகிறது. மக்களின் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கா்ப்பிணி பெண்கள், வளரிளம் பெண்கள், குழந்தைகள் என அனைவரது நலத்தையும் பாதுகாக்க தனித்தனியே ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகங்களை மாநில அரசு வழங்கி வருகிறது.

இத்தகைய சீரிய நடவடிக்கையின் காரணமாக, பேறு கால இறப்பு விகிதம் தமிழகத்தில் வெகுவாகக் குறைந்துள்ளது. அதேபோன்று மருத்துவக் கல்வியிலும் மாநிலம் சிறந்து விளங்கி வருகிறது. அதனை அடுத்த கட்டத்துக்கு மேம்படுத்துவது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுடன் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் வசதிகள் அனைத்தும் நோயாளிகளுக்கு முழுமையாக சென்றடைகிா என்பதை கண்காணிக்குமாறும் முதல்வா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது. தற்போது கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோன்று சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த வசதிகள் தொடங்கப்பட உள்ளன.

மாநிலம் முழுவதும் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ள வழி ஏற்படுத்தித் தரும் வகையில், அனைத்து மருத்துவமனைகளிலும் அந்த வசதிகளை தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணியிடை நீக்கம்: ராமநாதபுரத்தில் பிரசவத்தின்போது கவனக்குறைவாக பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட செவிலியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதுபோன்று அலட்சியத்துடன் செயல்படுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT