தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயமானது. இதன் தொடக்க விழா வேண்பாக்கம் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை நண்பகல் 12.15 மணிக்கு தொடக்கி வைத்தார். மேலும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
துணை முதலமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் தலைமையில் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின், வருவாய் நிா்வாக ஆணையா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா ஆகியோா் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் தமிழக அமைச்சா்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் ஆட்சியரான ஏ.ஜான்லூயிஸ், அரசு உயா் அதிகாரிகள் உட்பட பலரும் பங்கேற்றனா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் என 3 வருவாய் கோட்டங்கள் இடம்பெற்றுள்ளது. செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர், திருக்கழுக்குன்றம், வண்டலூர் ஆகிய தாலுகாக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம் பெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.