தமிழ்நாடு

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்: ஒப்புதல் கடிதத்தை அனுப்பியது மத்திய அரசு

DIN


தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைவதற்கான ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடிதம் மாநில சுகாதாரத் துறைச் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாநிலத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளும் தலா ரூ.325 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ளன. அதில் 60 சதவீத செலவினத்தை, அதாவது ரூ.195 கோடியை மத்திய அரசு ஏற்கவுள்ளது. மீதமுள்ள ரூ.130 கோடியை மாநில அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்திருப்பதால், உடனடியாக கல்லூரி கட்டுமானப் பணிகளைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்தனர். அடுத்த கல்வியாண்டு முதல் புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ப்ரீத்தி சுதான் ஆகியோரை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  புதுதில்லியில் அண்மையில்  சந்தித்துப் பேசினார். 

தமிழகத்தில் 6 இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை அமைப்பது தொடர்பாக அவர்களிடம் கோரிக்கை வைத்த அவர், அதற்கு தேவையான இடங்கள் குறித்த தகவல்களையும் மத்திய அமைச்சகத்திடம் அளித்தார். 

இதைத் தொடர்ந்து, புதுதில்லியில் கடந்த செப்.26- ஆம் தேதி நடைபெற்ற சுகாதாரத் துறை தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில், நாடு முழுவதும் புதிதாக தொடங்க உள்ள 31 மருத்துவ கல்லூரிகளின் பட்டியல் முடிவு செய்யப்பட்டது. அதில் தமிழகத்துக்கு 6 கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன.

அதன்படி திருப்பூர், நீலகிரி (உதகை), ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான ஒப்புதல் கடிதத்தை புதன்கிழமை (அக்.23) மத்திய சுகாதாரத் துறை அனுப்பியுள்ளது.

 தற்போது தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,350 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்நிலையில், தற்போது புதிதாக அமையவுள்ள கல்லூரிகளில் தலா 150 இடங்கள் வீதம் கிடைக்கவுள்ளன.

இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 30-ஆகவும், எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 4,250-ஆகவும் அதிகரிக்க உள்ளது.

நாட்டின் வேறு எந்த மாநிலத்திலும் இளநிலை மருத்துவப் படிப்பில் இவ்வளவு இடங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதுநிலை மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை, ஏற்கெனவே நாட்டிலேயே தமிழகத்தில்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிகமாக 1,761 இடங்கள்  உள்ளன. தற்போது அதன் தொடர்ச்சியாக எம்பிபிஎஸ் இடங்களிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக உருவெடுக்கவுள்ளது.

பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி
தமிழகத்தில் ஒரே நேரத்தில் ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்தேன். அதற்கான முன்மொழிவுகள் குறுகிய காலத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. எனது கோரிக்கையை ஏற்று,  ஆறு மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்துக்கு ஒரே நேரத்தில் ஆறு அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று நிகழ்வாகும். இதுவரை வரலாறு கண்டிராத இந்த சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT