தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் கோர முகத்தை காட்டிக் கொண்டிருக்கும் அருவருக்கத்தக்க கலாச்சாரம்: எதைச் சொல்கிறார் ராமதாஸ்? 

DIN

சென்னை: பதாகை கலச்சாரம் போன்றே தமிழகம் முழுவதும் கோர முகத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் அருவருக்கத்தக்க கலாச்சாரம் என்று சுவர் விளமபரங்களை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை பள்ளிக்கரணையில் பதாகை சரிந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட விபத்தில் சுபஸ்ரீ என்ற பெண் பொறியாளர் உயிரிழந்த விபத்து மற்றும் அதுகுறித்து தானாக வழக்குப் பதிவு செய்த உயர்நீதிமன்றம் தெரிவித்த கடுமையான கருத்துகள் ஆகியவற்றைத் தொடர்ந்து அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த பதாகைகளும், கட் அவுட்களும் வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி சட்டவிரோதமாக பதாகைகள் வைப்போருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

பொதுமக்களுக்கும், சாலைகள் மற்றும் நடைபாதைகளை பயன்படுத்துவோருக்கும் மிகக்கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் அனுமதி இல்லாத பாதுகாப்பற்ற உயிர்க்கொல்லி பதாகைகள், அலங்கார வளைவுகள், கட்&அவுட்டுகள் ஆகியவற்றை அமைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வருகிறேன். எனது வேண்டுகோள் பிற அரசியல் கட்சிகளால் செவிமடுக்கப்படவில்லை என்றாலும் கூட, உயர்நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மனநிறைவளிக்கின்றன. இவை வரவேற்கத்தக்கவையாகும். இந்த நேரத்துக்கான நடவடிக்கைகளாக மட்டும் இருந்து விடாமல், இவை தொடர வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பமாகும். இந்த விருப்பம் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் பதாகை கலச்சாரத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும்  இன்னொரு அருவருக்கத்தக்க கலாச்சாரம் அதன் கோர முகத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது. சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அரசு அலுவலகங்களின் சுவர்கள், பேருந்து நிறுத்தங்கள், பாலங்கள்.... அவ்வளவு ஏன்? பள்ளிக்கூட சுவர்களைக் கூட விட்டு வைக்காமல் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை எழுதுதல், சுவரொட்டிகளை ஒட்டுதல் என பொது இடங்களின் அழகைக் கெடுக்கும் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். கட்சிகளுடன் போட்டி போடும் வகையில் திரைத்துறை சார்ந்த விளம்பரங்களும், சுவரொட்டிகளும் பொது இடங்களை  அருவருக்கத்தக்கவையாகவும், பெண்களை முகம் சுழிக்க வைப்பவையாகவும் மாற்றிக் கொண்டிருக்கின்றன.

அரசுக்கு சொந்தமான இடங்களும், மலைகள், பாலங்கள் போன்றவற்றையும் நமது இல்லத்தின் வரவேற்பறையாக கருதினால் அவற்றின் அழகைச் சிதைக்க மனம் வராது. அதையும் மீறி பொது இடங்களின் அழகைக் குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான்.

இதைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களின் அழகை சிதைப்பவர்களுக்கு   கடுமையான தண்டனை வழங்கும் வகையில் 1959-ஆம் ஆண்டின் தமிழ்நாடு திறந்தவெளிப் பகுதிகளின் அழகு சீர்குலைக்கப்படுதல் தடைச் சட்டத்தில் அரசு உரிய திருத்தங்களை செய்து, அதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்; பொது இடங்களின் அழகை மேம்படுத்தும் வகையில் அவற்றில் அழகான, தமிழர்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான ஓவியங்களை வரைய அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT