தமிழ்நாடு

நீட் முறைகேடு விவகாரம்: அனைத்து கல்லூரிகளுக்கும் மருத்துவப் பல்கலை. முக்கிய உத்தரவு

DIN


நீட் தேர்வு முறைகேடு சர்ச்சையைத் தொடர்ந்து நிகழாண்டில் அத்தேர்வின் அடிப்படையில் கல்லூரிகளில் சேர்ந்த அனைத்து மாணவர்களது விவரங்களையும் சரிபார்க்குமாறு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களது ஆவணங்களில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் அதுகுறித்து 24 மணி நேரத்துக்குள் தகவல் அளிக்க வேண்டும் என்றும் அவர் மருத்துவக் கல்லூரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. யோகா - இயற்கை மருத்துவம் தவிர்த்து நீட் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரியில் சேர்ந்த அனைத்து மாணவர்களது விவரங்களையும் ஆய்வுக்குட்படுத்துமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கிண்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நினைவாற்றல் குறைபாடு, மறதி நோய் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் சென்னை மருத்துவக் கல்லூரி நரம்பியல் பேராசிரியர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் கலந்துகொண்டு மறதி நோய் சிகிச்சை குறித்து மக்களிடையே உரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக பொது மக்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நீட் தேர்வு முறைகேடு சர்ச்சை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில்:
பல்கலைக்கழகத்துக்கும், மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளுக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை. இருப்பினும், அதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருக்குமாயின் அதுகுறித்து  ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பு பல்கலைக்கழகத்துக்கு உள்ளது. அதன் அடிப்படையில்தான் மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களின் விவரங்களை சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவம் மட்டுமே சமூகத்தில் சாலச் சிறந்த கல்வி எனக் கருதுவது தவறு. மருத்துவத்தைப் போன்ற வேறு சில படிப்புகளைக் கற்றாலும் சமுதாயத்தில் மேன்மையை அடைய முடியும். எனவே, முறைகேடு செய்தாவது ஒரு படிப்பில் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம். அத்தகைய நடவடிக்கைகளுக்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருக்கக் கூடாது என்றார் அவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT