தமிழ்நாடு

கல்லூரி முதல்வர்கள் நியமனத்துக்குப் பிறகே இடமாறுதல் கலந்தாய்வு நடத்தக் கோரிக்கை

DIN

அரசு கலை-அறிவியல் கல்லூரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் பதவியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிய பிறகு ஆசிரியர் கலந்தாய்வை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 92 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 21 நிலை ஒன்று கல்லூரி முதல்வர் பணியிடங்களும், 51 நிலை-2 கல்லூரி முதல்வர் பணியிடங்களும் பல ஆண்டுகளாக காலியாக இருந்தன. 
இதனால் ஏற்படும் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் காரணமாக, காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை பேராசிரியர்கள் தொடர்ந்து முன்வைத்து வந்தனர்.
அதனை ஏற்று, முதல்வர் காலிப் பணியிடங்களைப் படிப்படியாக நிரப்பும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. முதல் கட்டமாக, கடந்த வாரம் 16 முதல்நிலை கல்லூரி முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 
அடுத்தகட்டமாக மேலும் 5 முதல்நிலை கல்லூரி முதல்வர் பணியிடங்களுக்கான பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், 51 இரண்டாம் நிலை முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்படுவது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. 
இந்த நிலையில், கல்லூரிப் பேராசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வை கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதற்கு கல்லூரி கல்வி இயக்குநரக இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 25 கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், முதல்வர் காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்பாமல், முன்கூட்டியே  ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடத்துவது பயனற்றது என்கின்றனர் பேராசிரியர்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத் தலைவர் சிவராமன் கூறியது:
பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதன் அடிப்படையிலேயே, அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 
இந்தச் சூழலில், 51 கிரேடு-2 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னதாகவே, இடமாறுதல் கலந்தாய்வை இயக்குநரகம் அறிவித்திருக்கிறது.
அவ்வாறு இடமாறுதல் கலந்தாய்வுக்குப் பின்னர், 51 முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்பட்டால், கலந்தாய்வு மூலம் பல்வேறு பகுதிகளுக்கு இடமாறுதல் பெற்றுச் சென்ற 51 மூத்த பேராசிரியர்களின் இடங்கள் மீண்டும் காலியாக விடப்படும்.
இது, ஏற்கெனவே அந்த இடத்துக்கு மாறுதல் பெற நினைத்த பேராசிரியர்களின் விருப்பத்தைப் பறிப்பதாகவே அமையும். 
எனவே, முதல்வர் காலிப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்ட பிறகு, இடமாறுதல் கலந்தாய்வை நடத்தவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT