தமிழ்நாடு

மாநாட்டில் பங்கேற்க நாளை உகாண்டா செல்கிறார் பேரவைத் தலைவர் தனபால்

DIN

சென்னை: கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாட்டிலுள்ள உகாண்டாவில், நடைபெறும் பேரவைத் தலைவர்களின் சர்வதேச மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் பேரவைத் தலைவர் பி.தனபால் பங்கேற்கிறார். 

அதேபோன்று, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜும் விரைவில் வெளிநாடு பயணம் செல்லவுள்ளார். கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் வெளிநாடு பயணம் செல்ல ஆயத்தமாகி வருகிறார்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த மாதம் 28-ஆம் தேதி மூன்று நாடுகளுக்குச் சென்றார். பிரிட்டன், அமெரிக்கா மற்றும் துபை ஆகிய நாடுகளுக்குச் சென்ற அவர் கடந்த 10-ஆம் தேதி, சென்னை திரும்பினார். இதனிடையே, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,  எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, நிலோபர் கபீல் உள்ளிட்டோரும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

பேரவைத் தலைவர் பயணம்: அமைச்சர்களைப் போன்றே, பேரவைத் தலைவர் பி.தனபாலும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாட்டிலுள்ள உகாண்டாவில் பேரவைத் தலைவர்களின் சர்வதேச மாநாடு வரும் 24 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இந்த மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் பேரவைத் தலைவர் பி.தனபால் பங்கேற்கிறார். இதற்காக அவர் வரும் 25-ஆம் தேதி உகாண்டா செல்கிறார். அவருடன் பேரவைச் செயலக உயரதிகாரிகளும் செல்லவுள்ளனர்.

உணவுத் துறை அமைச்சர்: பேரவைத் தலைவரைத் தொடர்ந்து, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோரும் வெளிநாடுகளுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதுகுறித்து, தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது: உணவு தானிய சேமிப்பு முறைகள், அங்கு உணவு தானியங்களை சேமிக்க பயன்படுத்தப்பட்டு வரும் நவீன முறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராய உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அமெரிக்கா செல்லவுள்ளார். இதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. பயணத்துக்கான தேதி விரைவில் இறுதி செய்யப்படும். 

அமைச்சருடன் உணவுத் துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் எம்.சுதாதேவி உள்ளிட்டோரும் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனும் வெளிநாடு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக அனுமதியை, அவர் முதல்வர் அலுவலகத்திடம் கோரியுள்ளார். 

இந்த அனுமதி கிடைத்தவுடன் அவருக்கான பயணத் திட்டம் வகுக்கப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அமைச்சரவையில் 15-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தங்களது துறை சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT