நீக்கப்படுகிறதா இரயில்வே அமைச்சகம்? விவேக் தேவ்ராய் குழு பரிந்துரைகளை நிராகரிக்க இ.கம்யூனிஸ்ட் கோரிக்கை
இரயில்வே அமைச்சகத்தை நீக்கும் விதமான அபாயத்தை ஏற்படுத்தியுள்ள விவேக் தேவ்ராய் குழு பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: இரயில்வே அமைச்சகத்தை நீக்கும் விதமான அபாயத்தை ஏற்படுத்தியுள்ள விவேக் தேவ்ராய் குழு பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இரயில்வே நிர்வாகத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு விவேக் தேவ்ராய் தலைமையில் குழு அமைத்தது. இக்குழு 300 பக்கங்களைக் கொண்ட பரிந்துரையை மத்திய அரசுக்கு 2015-ம் ஆண்டு வழங்கியுள்ளது. கோடிக்கணக்கான மக்களின் போக்குவரத்து சேவையை பொதுத்துறையில் இருந்து தனியாருக்கு தாரைவார்க்கும் நோக்கத்துடன் விவேக்ராய் குழுவின் பரிந்துரைகள் அமைந்துள்ளன. இந்த மோசமான பரிந்துரைகளில் சிலவற்றை மத்திய அரசு நடைமுறையில் நிறைவேற்றி விட்டது.
இதனைத் தொடர்ந்து இரயில்வே அமைச்சகம் அவசியமில்லை - என்பதையும் செயல்படுத்தும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. பொதுத்துறையின் பயணிகள் ரயிலை முழுமையாக ரத்து செய்திட வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்று, தற்போது தமிழ்நாடு உட்பட சில ரயில்வே மண்டலங்களில் பயணிகள் இரயில்களை ரத்து செய்திட மத்திய அரசு முடிவு செய்துள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அதனை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறது.
இரயில்களை தனியாரிடம் விடுவதன் மூலம் அவர்கள் விருப்பப்படி கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளவும், லாபம் தரக்கூடிய வழித்தடத்தில் மட்டுமே இரயில்களை இயக்கி, பயணிகள் சேவையை சுருக்கி விடும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்கள் நலன் கருதி விவேக் தேவ்ராய் குழு பரிந்துரைகளை மத்திய அரசு முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்வதுடன், இரயில்வே நிர்வாகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் தவறான முடிவுகளுக்கு எதிராக அனைவரும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவிக்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.