தமிழ்நாடு

2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மிகப் பெரிய குத்துக்கல் கண்டெடுப்பு

DIN

குந்தாரப்பள்ளி அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிகப்பெரிய குத்துக்கல்லை வரலாற்று ஆய்வாளர்கள் அண்மையில் கண்டறிந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், மாவட்ட அரசு அருங்காட்சியகம் இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு வரலாறுகளைக் கண்டறிந்து, அவற்றைப் பதிவு செய்து வருகின்றனர். 

அதன்படி, குந்தாரப்பள்ளியை அடுத்த சாமந்தமலை கிராமத்தின் மேற்கு திசையில் உள்ள பாரத கோயில் அருகே ராஜாமணி என்பவருக்குச் சொந்தமான வேடங்கொல்லை என்ற விளைநிலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பெரிய பெருங்கற்கால அரியவகை குத்துக்கல்லைக் கண்டறிந்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:  குத்துக்கல் என்பது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்புக் கால மக்கள், இறந்தவர்களுக்காக எழுப்பும் நினைவுச் சின்னங்களில் ஒன்று.

பொதுவாக குத்துக்கல் என்பது 2 அடி அகலமும், 12 முதல் 15 அடி உயரத்துடன் அடிப்பகுதி பெருத்து,  நுனிப்பகுதி சிறுத்து செங்குத்துக் கல்லாக இருக்கும்.  பெரிய பலகை கல் போன்ற இந்த வகை குத்துக்கல் தேவனூர், மல்லசந்திரம், மகாராஜகடை போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம்,  மோட்டூர், உடையார்நத்தம் ஆகிய இடங்களில் காணப்படும் குத்துக்கல் பலகைகள் பெண் அல்லது பறவை உருவ அமைப்பில் காணப்படுகின்றன. சாமந்தமலையில் கண்டறியப்பட்ட குத்துக்கல் சுமார் ஒன்பதரை அடி அகலமும்,  11 அடி உயரமும்,  ஓர் அடி கனமும் உள்ள கல் பலகையாகும்.  

இந்த கல் பலகையில் விசிறிப்பாறையாக உருவம் வடிக்க முயற்சி செய்துள்ளதைக் காண முடிகிறது.

இந்த குத்துக்கல்லுக்கு மேற்கு திசையில் 250 மீட்டர் தொலைவில் இதே போன்ற ஒரு குத்துக்கல் காணப்படுகிறது.   இதுபோன்ற குத்துக்கல், தமிழகத்தில் ஒரு சில மட்டுமே உள்ளன.

இந்த ஆய்வில்,  கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி, வரலாற்று ஆய்வாளர் சுகவன முருகன், சின்னப்பன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT