தமிழ்நாடு

ஐஎன்எக்ஸ் வழக்கு: சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது தில்லி உயர் நீதிமன்றம்

UNI

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

விசாரணை நீதிமன்றம் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்த நிலையில், தில்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி சுரேஷ் கெய்த், சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்வதாக இன்று தீர்ப்பளித்தார்.

சிதம்பரத்துக்கு ஜாமீன் அளிக்க சிபிஐ தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரை வெளியே விட்டால் சாட்சியங்களைக் கலைத்துவிடுவார் என்று சிபிஐ தரப்பில் கூறப்பட்டதை அடுத்து, சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக நடந்த விசாரணையின் போது, சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், "இந்த வழக்கில் விசாரணை முடியும் வரை சிதம்பரத்துக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது.

தொழிலதிபர் இந்திரானி முகர்ஜி, சிதம்பரத்தை சந்தித்தார். ஆனால், பார்வையாளர்கள் புத்தகத்தில் இந்திரானி வருகை குறித்த பதிவு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், ஹோட்டலில் இருந்து கணவர் பீட்டர் முகர்ஜியுடன் இந்திரானி முகர்ஜி காரில் சிதம்பரத்தைச் சந்திக்க சென்றது குறித்த விவரம் கிடைக்கப்பெற்றுள்ளது' என்றார்.

சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி, "மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்த போது நூற்றுக்கணக்கானோர்  தன்னை சந்தித்துள்ளதாகவும், ஐஎன்எக்ஸ்  மீடியா குழுவினர் எப்போது சந்தித்தனர் என்பது குறித்து நினைவில் இல்லை என்றும் சிதம்பரம் என்னிடம் தெரிவித்தார்' என்றார்.

கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை கடந்த மாதம் 21ஆம் தேதி  கைது செய்யப்பட்டார். அவரை அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT