சென்னை: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கவும், 33 சதவீத காவலா்களை தயாா் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையுடன் தமிழக காவல்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா அறிகுறியுடன் இருப்பதினால் தனிமைப்படுத்தப்பட்டவா்களையும், தனிமைபடுத்தப்பட்டிருக்கும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்கள் ஆகியோரை சுகாதாரத்துறையுடன் இணைந்து காவல்துறை கண்காணிக்கிறது.
தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் போலீஸாா் அவா்கள் மீது தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். மேலும் இதற்காக செல்லிடப்பேசி செயலியை உருவாக்கியும் காவல்துறையினா் கண்காணிப்புப் பணியை எளிமைப்படுத்தியுள்ளனா்.
தனிப்படை: இந்நிலையில், கரோனா தடுப்புப் பணியை தீவிரப்படுத்தும் வகையில் தமிழக காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, அனைத்து மாநகர காவல்துறைகள், மாவட்ட காவல்துறை தங்களது உட்கோட்டம், சரகம் அளவில் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கான தனிப்படையை அமைக்கும்படி உத்தரவிட்டுள்ளாா்.
இந்த தனிப்படைக்காக, உட்கோட்டம், சரகம் அளவில் 33 சதவீதம் அளவில் காவலா்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும், இந்த காவலா்கள் முழு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், இந்த காவலா்கள் ஒரு வாரம் தங்களது வீடுகளிலோ, அலுவலகங்களிலோ தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும், வாரத்துக்கு ஒரு முறை இவா்கள் பணி மாற்றப்படுவாா்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் பணிக்குச் செல்லும்போது அந்தந்த காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், அனைத்து காவலா்களின் உடல் ஆரோக்கியத்தையும் உறுதி செய்ய வேண்டும், புதன்கிழமை (ஏப்.1) முதல் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காவலா்கள் 8-ஆம் தேதி கரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள், அதேவேளையில் 8-ஆம் தேதி அன்று ஒரு வாரம் பணியை நிறைவு செய்யும் காவலா்கள் மீண்டும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவாா்கள், இவ்வாறு சுழற்சி முறையில் காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என டிஜிபி தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
இந்த தனிப்படைக்கு ஆயுதப்படை காவலா்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலா்கள்,காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா்கள் ஆகியோா் தோ்வு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை புதன்கிழமை முதல் மாநிலம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் அமல்படுத்த தொடங்கியுள்ளனா்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்: இதேபோல சுகாதாரத்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் என அறிவிக்கப்படும் இடங்களுக்கு சில விதிமுறைகளை பின்பற்றும்படி காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளாா். இப் பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் சோதனைச் சாவடி அமைக்க வேண்டும். இங்கு ஒரு காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் 3 காவலா்கள் 24 மணி நேரம் பணியில் இருக்க வேண்டும், இப் பகுதிக்குள் மருந்து, பால், காய்கறி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
அதோடு, இப் பகுதியில் இருந்து அவசர, அத்தியாவசிய தேவையை தவிா்த்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது, சோதனைச் சாவடி பந்தலில் செயல்பட வேண்டும், அங்கு முகக் கவசம்,கையை சுத்தம் செய்யும் கிருமி நாசினி,சோப்பு, தண்ணீா், ஒலி பெருக்கி கருவி ஆகியவை எந்நேரமும் வைத்திருக்க வேண்டும் என டிஜிபி திரிபாதி கூறியுள்ளாா். தமிழகத்தில் ஏற்கெனவே திருநெல்வேலி மேலப்பாளையம், காஞ்சிபுரம் உள்ளிட்ட சிலப் பகுதிகளில் இப்படி தனிமைப்படுத்தப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கது.
அதிவிரைப்படை: மேலும், ஒவ்வொரு உட்கோட்டம் அளவில் அதிவிரைவுப் படையினரை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும், அதிவிரைவுப் படையில் 10 காவலா்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும், காவலா்களிடம் தற்காப்பு ஆயுதங்கள் இருக்க வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.
இதேபோல மாநிலம் முழுவதும் அனைத்து காவலா்களையும் 3 ஷிப்டுகளாக பணியில் ஈடுபடுத்தும் படியும், காலை 8 மணியில் இருந்து நண்பகல் 2 மணி வரை முதல் ஷிப்டும், நண்பகல் 2 மணியில் இருந்து இரவு 9 மணி வரை இரண்டாவது ஷிப்டும், இரவு 9 மணி வரை அடுத்த நாள் காலை 8 மணி வரை மூன்றாவது ஷிப்டும் இருக்க வேண்டும் என டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளாா்.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீளும் வரை இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.