முகப்பு
தமிழ்நாடு

மன அழுத்தத்தைப் போக்கும் புதுமை விளையாட்டு: மதுரை இளைஞரின் புதிய முயற்சி

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்

Updated On : 4 ஏப்ரல், 2020 at 12:47 PM
பகிர்:

மதுரை: கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

என்னதான் தொலைக்காட்சி, செல்லிடப்பேசியில் விளையாட்டு, சமூக வலைத்தளங்கள் மற்றும் இதர விளையாட்டுகள் எனப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தாலும் அனைவரிடமும் ஒருவித மன அழுத்தம் இருந்துகொண்டே இருக்கிறது.

காலையிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரை வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பது அனைவரிடமும் வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் கரோனா வைரஸ் வேகமாகப் பரவும் நிலையில் வெளியே செல்லக்கூடாது என்பது அவசியமானது.

Advertisement

இந்த சூழலில் மதுரையைச் சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்துள்ள புதுமை விளையாட்டு மன அழுத்தத்தைக் குறைப்பதாக இருக்கிறது. ஆரம்பத்தில் சில பள்ளிகளில் இந்த விளையாட்டை அவர் கற்றுக் கொடுத்துள்ளார். அஷ்யூடு எனப் பெயர் வைத்துள்ள இந்த விளையாட்டு பார்ப்பதற்குச் சதுரங்கத்தைப் போன்று இருந்தாலும் நமது சமூகப் பிரச்னைகளை குறிப்பதாக அமைந்திருக்கிறது. இதில் விளையாடும் நபர்களுக்கு தலா 8 காய்கள் வழங்கப்படும். இந்த காய்களை தங்களது முனையிலிருந்து பிடித்த இடத்தில் வைத்து நகர்த்தி முன்னேறிச் செல்ல வேண்டும். அதேநேரம் எதிர்புறம் அமர்ந்திருக்கும் நபர் நமது காய்களைத் தடுக்கும் விதத்தில் அவரது நகர்வுகள் இருக்கும்.

விளையாடக்கூடிய இரு நபர்களும் ஒருவருக்கொருவர் காய்களை முன்னேறிச் செல்வதில் தடுப்பதும் அதில் தப்பிச் செல்வதும் தான் இந்த விளையாட்டு. ஒருவர் இந்த தடைகளை எல்லாம் தாண்டி எதிர்முனைக்குச் செல்லும்போது வெற்றி பெறுபவர் ஆகிறார். ஒவ்வொரு நகர்வுக்கும் ஒரு சமூக கருத்தைக் கூறுகிறார் இந்த விளையாட்டை கண்டுபிடித்துள்ள இளைஞர் அப்துல் ரகுமான்.

இதுகுறித்து அவர் கூறியது:

எனது அஷயூடு விளையாட்டு தற்போது நிலவும் தண்ணீர் பிரச்சனைகளான புவி வெப்ப மயமாதல் காடுகளை அழித்தல் ஆகிய சமூக பிரச்னைகளை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த விளையாட்டை விளையாடும் போது இந்த பிரச்னைகளை எல்லாம் இவ்வாறு தாண்டி செல்வது என்பதற்கான தீர்வும் சொல்லப்படுகிறது. இந்த விளையாட்டுக்குக் காப்புரிமை பெற்றுள்ளேன்.

ஆரம்பத்தில் சில பள்ளிகளில் இந்த விளையாட்டைக் கற்றுக்கொடுத்தேன். மாணவர்களிடம் நல்ல மன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் செல்லிடப்பேசியில் மூழ்கியிருப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா தடை உத்தரவு காரணமாக மதுரை மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆதரவற்றவர்கள் வெளியூரைச் சேர்ந்த நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க இந்த விளையாட்டை கற்றுக் கொடுத்துள்ளேன். 

மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் கடந்த இரு நாட்களாக பழங்காநத்தம் பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்கியுள்ளவர்களுக்கு இந்த விளையாட்டைக் கற்றுக்கொடுத்தேன் அவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் விளையாடினார்கள். தங்களது கவலையை மறந்து விளையாடுவதோடு மன அழுத்தத்தையும் குறைத்துள்ளது என்றனர். இவ்வாறு இளைஞர் அப்துல் ரகுமான் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.