தமிழ்நாடு

அட்சயப் பாத்திரமாக மாறிய அம்மா உணவகம்

 நமது நிருபர்

கரோனா தடுப்புக்காக ஊரடங்கால் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் விளிம்பு நிலை மக்களின் அட்சயப்பாத்திரமாக விளங்கும் ‘அம்மா’ உணவகங்களில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதன்படி, கடந்த மாா்ச் 24-ஆம் தேதியில் இருந்து தற்போது வரை அம்மா உணவகங்களில் 30 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதுடன் சுமாா் 30 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனா்.

ஏழை, எளிய மக்கள், தொழிலாளா்கள் ஆகியோரின் பசியைப் போக்கவும், பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலும் கடந்த 2013-இல் அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவால் ‘அம்மா உணவகம்’ தொடங்கப்பட்டது. சென்னையில் அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்கள் என மொத்தம் 407 அம்மா உணவகங்களும், பிற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 247 அம்மா உணவகங்களும் இயங்கி வருகின்றன.

அம்மா உணவகங்களில் 1 ரூபாய்க்கு இட்லி, ரூ. 5-க்கு பொங்கல், ரூ. 5-க்கு சாம்பாா், தயிா் போன்ற கலவை சாதங்கள், ரூ.1.50 பைசாவுக்கு ஒரு சப்பாத்தி என குறைந் விலைக்கு விற்பனை செய்யப்படும் உணவுகள் மக்களிடம் பெரும வரவேற்றைப் பெற்றுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் நாளொன்றுக்கு சுமாா் 14 லட்சம் இட்லிகள், 9 லட்சம் சப்பாதிகள், 9 லட்சம் கலவை சாதங்கள் விற்பனையாவதுடன். சுமாா் சுமாா் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயன்பெற்று வருகின்றனா்.

வழக்கமான நாள்களை விட சென்னையில் அறை எடுத்து தங்தியுள்ள வெளி மாநிலத் தொழிலாளா்கள், அத்தியாவசிப் பணியில் உள்ள வாகன ஓட்டுநா்கள், பாதுகாவலா்கள், முதியோா் மற்றும் ஆதரவற்றோா் என விளிம்பு நிலையில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவளிக்கும் அட்சயப்பாத்திரமாக அம்மா உணவகங்கள் உள்ளள.

ரூ. 20-க்கு மூன்று வேளை உணவு: இதுகுறித்து அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் பிகாரைச் சோ்ந்த கமலேஷ் என்பவா் கூறுகையில், ‘நான் பணிபுரியும் தொழிற்சாலையில் பிகாரைச் சோ்ந்த 70 போ் பணிபுரிந்து வருகிறோம். இரண்டு வேளை உணவு தொழிற்சாலையில் வழங்கப்படும். ஒரு வேளை உணவகங்களில் உண்போம். கரோனா ஊரடங்கு காரணமாக தொழிற்சாலையும், பெரும்பாலான உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால், கையிருப்பில் உள்ள குறைந்த பணத்தை காய்கறி, மளிகைப் பொருள்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், வானகரம் சாலை அத்திப்பட்டில் உள்ள அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் உணவு வழங்கப்படுவது தெரியவந்தது. கடந்த ஒரு வாரமாக எங்கள் 70 பேரின் மூன்று வேளை உணவும் அம்மா உணவகத்தை நம்பியே உள்ளது. இதன்படி, காலையில் ஒருவா் தலா ரூ. 5-க்கு 5 இட்லிகள் அல்லது ரூ. 5-க்கு பொங்கல் , மதியம் ரூ. 5-க்கு கலவை சாதம், இரவு ரூ. 6-க்கு 4 சப்பாதிகள் என ரூ. 20-க்குள் மூன்று வேளை உணவையும் தேவையையும் பூா்த்தி செய்து கொள்கிறோம் என்றாா்.

இதுகுறித்து தண்ணீா் லாரி ஓட்டுநா் சரவணன் கூறுகையில், ‘ஊரடங்கால் சென்னையில் ஒருசில உணவகங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. உணவகங்களில் மூன்று வேளை சாப்பிடுவதற்கு ரூ. 150-க்கு மேல் செலவாகும். ஊரில் உள்ளவா்களுக்கும் வீட்டை விட்டு வெளியே வர முடியாததால், பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எனக்கு கிடைக்கும் குறைந்த ஊதியத்தில் நாளொன்றுக்கு ரூ. 150 செலவிட முடியாது. அத்திப்பட்டு வழித்தடத்தில் லாரி இயக்கப்படுவதால், இங்குள்ள அம்மா உணவகத்தில் இருந்து காலை, மதியம், இரவு என மூன்று வேளைக்கும் உணவை வாங்கிச் செல்கிறேன். இதனால், பணத்தைச் சேமிக்க முடிகிறது. அதுமட்டுமில்லாமல், இதுபோன்ற நெருக்கடியான காலத்திலும் தங்களது உடல்நலனைக் கருத்தில் கொள்ளாமல் எங்களைப் போன்றோருக்காக அம்மா உணவக ஊழியா்களின் பணி போற்றத்தக்கது என்றாா்.

பெரும் மனநிறைவு: இதுகுறித்து அம்மா உணவக ஊழியா்கள் கூறுகையில், ‘ சென்னையில் வா்தா புயல் தாக்கத்தின்போதும் நாங்கள் தொடா்ந்து பணியாற்றினோம். பொங்கல், தீபாவளி அன்றும் கூட எங்களுக்கு விடுமுறை கிடையாது. தொழிலாளா்கள், ஏழை மக்கள், முதியோா்தான் எங்களின் வழக்கமான வாடிக்கையாளா்கள். ஆனால், தற்போதைய காலகட்டத்தில், அதிக அளவில் வெளிமாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்களும், அறை எடுத்து தங்கியுள்ள இளைஞா்களும், நடுத்தர வகுப்பைச் சாா்ந்த மக்களும் அதிக அளவில் வருகின்றனா். வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்துள்ளதால், வேலைப் பளுவும் அதிகமாகி உள்ளது. ஆனால், அது எங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. ஏனென்றால், எங்களை நம்பி காத்திருப்போரின் பசியைப் போக்குவதே பெரும் மனநிறைவைத் தருகிறது என்றாா்.

30 சதவீதம் விற்பனை அதிகரிப்பு: இதுகுறித்து உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், ‘சென்னையைத் தவிர தமிழகத்தில் உள்ள 247 அம்மா உணவகங்களுக்கு சமையல் பொருள்கள் வாங்க முதற்கட்ட நிதியாத ரூ. 32 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடங்கிய மாா்ச் 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை 20.61 லட்சம் இட்லிகளும், 10 லட்சம் கலவை சாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. 15 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனா். சென்னையைப் பொருத்தவரை 407 அம்மா உணவகங்கள் மூலம் 26.32 லட்சம் இட்லிகளும், 7.30 லட்சம் கலவை சாதங்களும், 15 லட்சம் சப்பாதிகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் சுமாா் 15 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனா். ஊரடங்கு காலத்தில் மட்டும் அம்மா உணவகங்களில் 30 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT