முகப்பு
தமிழ்நாடு

கோவில்பட்டி அருகே பதுங்கு குழிகள் அமைத்து மதுபானங்கள் விற்பனை

கோவில்பட்டி அருகே பதுங்கு குழிகள் அமைத்து டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை செய்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:23 PM
பகிர்:

கோவில்பட்டி அருகே பதுங்கு குழிகள் அமைத்து டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை செய்து வருவதாக வந்த தகவலையடுத்து போலீஸார் அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்தனர். 

கரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி போலீஸ் சப் டிவிஷனில் டாஸ்மாக் சரக்குகள் விற்பனை எவ்வித தங்கு தடையுமின்றி அமோகமாக நடைபெற்று வருவதாக பல்வேறு தரப்பிலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் புகார்கள் சென்றன. 

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உத்தரவின் பேரில் எஸ்.பி. தனிப்பிரிவு எஸ்.ஐ. இசக்கி ராஜா தலைமையிலான போலீஸ் டீம் கோவில்பட்டி சப் டிவிஷனில் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணியிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் விவசாய நிலங்களிலும் சாலையோரங்களிலும் பதுங்கு குழிகள் அமைத்து மது விற்பனை ஜோராக நடைபெற்று வருவதாகக் கிடைத்த தகவலையடுத்து எஸ்.ஐ. இசக்கி ராஜா தலைமையிலான காவலர் குழு அப்பகுதிக்கு விரைந்து சென்று முகாமிட்டுக் கண்காணித்து வந்தனர். அப்போது பதுங்கு குழிகளுக்குள் பதுக்கி வைத்து சரக்கு விற்பனையில் ஈடுபட்ட நபரை கையும் களவுமாகப் பிடித்து அவரிடம் இருந்து 500க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

Advertisement

இச்சம்பவத்திற்கு முன்னதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கயத்தாறு பகுதியில் 4,500 மதுபான பாட்டில்களை இசக்கிராஜா தலைமையிலான போலீஸ் டீம் கைப்பற்றி கயத்தாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்து இருந்தது. போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் அழுத்தம் காரணமாகவும் உத்தரவு காரணமாகவும் அந்த சரக்குகளை கயத்தாறு உள்ளூர் காவல்துறை சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர்களிடமே திரும்ப ஒப்படைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 

அதுகுறித்த போட்டோ வீடியோக்கள் தனிப்பிரிவு காவலர் குழுவிடம் அப்போது இல்லாத நிலையில் அதனைப் பிடித்த தனிப்பிரிவு போலீசார் செய்வதறியாது தவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது நாலாட்டின் புதூரில் குழிகளுக்குள் பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதைத் தனிப்படை காவலர் குழு வீடியோ பதிவு செய்தது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் காவல் உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சியும் விரக்தியும் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments