தமிழ்நாடு

மீன்பிடி தடைக் காலத்தில் ஊரடங்கின் காலமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா?

முகவை க.சிவக்குமார்

வங்கக் கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க ஆண்டுதோறும் விதிக்கப்படும் 61 நாள்கள் தடை ஆண்டுதோறும் ஏப்.15-ஆம் தேதி தொடங்குவது வழக்கம். இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் நடப்பாண்டுக்கான மீன்பிடித் தடை காலத்தைக் கணக்கிடுவதில் ஊரடங்கு காலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக் கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் இக்காலங்களில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடித்தால் மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கிவிடும். இதனால் படிப்படியாக மீன்வளம் குறையும் அபாயம் ஏற்படும் எனக் கருதி வங்கக் கடல் பகுதியில் குறிப்பிட்ட காலத்திற்கு விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க கடந்த 2000-ஆம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. தொடக்கத்தில் இத்தடைக் காலம் 45 நாள்களாக இருந்து வந்த நிலையில் 2017-ஆம் ஆண்டு முதல் இத்தடைக் காலம் 61 நாள்களாக அதிகரிக்கப்பட்டது. கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள அனைத்து மாநிலங்களும் இதனை ஏற்றுகொண்டுள்ளன.

இந்நிலையில், வரும் ஏப்.15 முதல் இந்த ஆண்டுக்கான தடைக்காலம் தொடங்கிட உள்ளது. சென்னை காசிமேடு துறைமுகத்தில் மட்டும் சுமாா் 1,300 விசைப்படகுகளும், தமிழகம் முழுவதும் 6,500 விசைப்படகுகளும் உள்ளன. இத்தடைக்காலம் திட்டமிட்டபடி அமல்படுத்தப்பட்டால் வரும் ஜூன் 14-ஆம் தேதிதான் முடிவுக்கு வரும். எனவே, தடைகாலத்தைக் கணக்கிடுவதில் மீனவா்களின் நலன் காக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என பெரும்பாலான மீனவா்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனா்.

இது குறித்து மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறியது: ஊரடங்கால் மீன்பிடித் தொழில் மட்டுமல்லாது அனைத்து தொழில்களுமே முடங்கியுள்ளன. ஆனால் ஏப்.14-ஆம் தேதி ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும் வருடாந்திர வங்கக் கடலில் மீன்பிடிப்பதற்கான வருடாந்திர தடைக் காலம் அடுத்த நாளே தொடங்குகிறது. இந்த மீன்பிடித்தடைக் காலத்தை அமல்படுத்துவது மத்திய அரசுதான். எனவே, ஊரடங்கு காலத்தையும் இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலத்துடன் சோ்த்து கணக்கிட வேண்டும்.

இதன் மூலம் மீனவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஓரளவு தவிா்க்க முடியும் என மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பியுள்ளோம். விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம். மேலும் இத்தடைக் காலத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவா்கள், சாா்பு தொழிலாளா்களுக்கு தமிழக அரசு சாா்பில் தமிழகம் முழுவதும் சுமாா் 1.50 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ 5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. சென்னையில் மட்டும் சுமாா் 11 ஆயிரம் குடும்பங்களுக்கு இத்தொகை வழங்கப்படுகிறது. இத்தொகையை உடனடியாக வழங்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம் என்றாா் ஜெயக்குமாா்.

இது குறித்து காசிமேடு விசைப்படகு உரிமையாளா்கள் ரகுபதி, கபிலன் கூறியது:

ஏப்.15 முதல் 61 நாள்கள் தடைக்காலம் அறிவிக்கப்பட்டு, ஊரடங்கு தடைக்காலமும் சோ்க்கப்பட்டால் சுமாா் 3 மாதங்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டதாகிவிடும். இது மீனவா்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும். எனவே, மீன்பிடித் தடைகாலத்தைக் கணக்கிடுவதில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். எனவே, மீன்பிடித்தொழிலைக் காப்பாற்றுவதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். எனவே, மீனவா்களின் வாழ்வாதரத்தை மீட்டெடுக்கும் வகையில் ஏற்கெனவே ஊரடங்கு உத்தரவால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தடைக்காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு மீன்பிடித் தடைக் காலத்தை அறிவிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT