தங்க இடம் கொடுத்ததற்கு நன்றிக்கடன்: அரசுப் பள்ளியை பொலிவடையச் செய்த தொழிலாளர்கள்
தங்க இடம் கொடுத்த அரசுப் பள்ளிக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக அந்த..
ஈரோடு: தங்க இடம் கொடுத்த அரசுப் பள்ளிக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக அந்த பள்ளி வளாகத்தைப் பொலிவடையச் செய்துள்ளனர் ஆதரவற்ற தொழிலாளர்கள்.
ஈரோடு மாவட்டம் கரோனாவை வென்ற மாவட்டமாக முதல் மாவட்டமாகத் தலைநிமிர்ந்து நிற்கிறது. கரோனா கட்டுப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகத்துடன் அரசு அதிகாரிகள் மட்டுமின்றி சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பை ஊரடங்கின்போது சிறப்பாகச் செய்து வருகின்றனர்.
ஜீவிதம் பவுண்டேசன், தாய்மை அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாலையோரங்களில் ஆதரவற்று சுற்றித்திரிந்தவர்கள், வேலையிழப்பால் சாலையோரம் தஞ்சமடைந்த வெளி மாவட்ட, வெளி மாநில தொழிலாளர்களுக்குத் தங்கும் இடம், உணவு கொடுத்துப் பாதுகாத்து வருகின்றனர்.
Advertisement
இதில் தாய்மை அறக்கட்டளை சார்பில் ஈரோடு வீரப்பம்பாளையம், திண்டல் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் தலா 40 பேர் வீதம் 80 பேர் தங்க வைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்படுகிறது. நன்கொடையாளர்கள் புதிய ஆடை மற்றும் பொருள்கள் வழங்கி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக வீரப்பம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் தங்கி இருக்கும் ஆதரவற்றவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் இணைந்து அந்த பள்ளியின் சுற்றுப்புறத்தை முற்றிலும் தூய்மையாக்கி இருப்பதுடன், பள்ளி கட்டடங்களுக்கு வண்ணம் தீட்டி, ஓவியங்களும் வரைந்துள்ளனர்.
இதுகுறித்து தாய்மை அறக்கட்டளை இயக்குநர் மேகலா கூறியதாவது:
வீரப்பம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் 40 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் பெயிண்டிங், கட்டட வேலை உள்ளிட்ட அன்றாட கூலி வேலைக்குச் செல்பவர்கள்தான் உள்ளனர். வீடு, உறவினர்கள் இல்லாத இவர்கள் சாலையோரங்களில் படுத்து இருந்து கிடைக்கும் வேலைக்குச் சென்று வந்தனர். ஊரடங்கு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை எதுவும் இல்லாதது மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இங்கேயே ஏதேனும் வேலை இருந்தால் செய்யலாம் என்று என்னிடம் கூறினர்.
இதனையடுத்து பள்ளிக்கூட வளாகத்தைச் சுத்தம் செய்வது என்று முடிவு செய்தோம். அனைவரும் ஆர்வமுடன் வேலை செய்தனர். அதைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள 4 கட்டடங்களின் சுவர்களுக்கு பெயிண்ட் அடிக்க திட்டமிட்டு நன்கொடையாளர்கள் உதவியுடன் பெயிண்ட் வாங்கி தொழிலாளர்களிடம் கொடுத்தோம். அவர்கள் மிகவும் நேர்த்தியாகக் கட்டடங்களுக்கு வண்ணம் தீட்டினர். அதில் ஓரிருவர் ஓவியர்களாக உள்ளனர். அவர்கள் கட்டட சுவரில் அப்துல்கலாம் படத்தையும் வரைந்துள்ளனர். தாங்கள் சிரமப்பட்டாலும், தங்கி இருக்க இடம் கொடுத்த பள்ளியைப் பொலிவடையச்செய்து பெருமை தேடிக்கொண்டுள்ளனர்.
கூலி கேட்பதில்லை என்ற முடிவுடன் தான் இந்த பணியைச் செய்தனர். பெயிண்ட் மற்றும் உபகரணங்கள் வாங்க ரூ.50,000 செலவானது. எங்கள் பணியை மண்டல கண்காணிப்பு அலுவலர் டி.எஸ்.வெங்கடேஷ், மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன் உள்ளிட்டோர் பாராட்டினர் என்றார்.